தில்லியில் காற்றின் தரத்தில் மீண்டும் பின்னடைவு

தலைநகர் தில்லியில் காற்றின் தரத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. காற்றில் மாசு

தலைநகர் தில்லியில் காற்றின் தரத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. காற்றில் மாசு அதிகரித்ததன் காரணமாகவே காற்றின் தரம் மோசமான பிரிவிலிருந்து மிகவும் மோசமான பிரிவுக்குச் சென்றதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லியில் வெள்ளிக்கிழமை காற்றின் ஒட்டுமொத்தத் தரக் குறியீடு 315 என்ற அளவில் இருந்தது. இது காற்றின் தரத்தில் மிகவும் மோசமான பிரிவுக்கு சென்றதைக் குறிக்கிறது. தில்லியில் 16 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவிலும், 22 இடங்களில் மோசமான பிரிவிலும் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பிஎம் 2.5 நுண்துகள் அளவு 139 ஆகவும், பிஎம் 10 நுண்துகள் அளவு 210 ஆகவும் பதிவாகி இருந்தது. மழை இல்லாமல் போனதால் காற்றில் மாசு அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. காற்றின் ஒட்டுமொத்தத் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் நல்ல பிரிவிலும், 51 - 100 வரை திருப்தி, 101 - 200 மிதமானது, 201 - 300 மோசமானது, 301 - 400 மிகவும் மோசமானது, 401 முதல் 500 வரை இருந்தால் காற்றின் தரம் கடுமையான பிரிவிலும் இடம் பெறும்.
தில்லியில் பட்டாசு வெடிக்கப்பட்டதன் காரணமாக தீபாவளிக்குப் பிறகு காற்றில் மாசு அதிகரித்தது. இதனால், தில்லியின் சுற்றுப்புறக் காற்றின் தரம் மிகவும் மோசம் மற்றும் கடுமையான பிரிவு ஆகியவற்றுக்கு இடையே மாறி, மாறி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து, தில்லியில் புதன்கிழமை காற்றின் தரக் குறியீடு 348 என்ற அளவில் மிகவும் மோசமான பிரிவில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு, ஒட்டுமொத்த தரக் குறியீடு 237 என்ற அளவில் இருந்தது. மேலும், தில்லியில் இரண்டு இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவிலும், 26 இடங்களில் மோசமான பிரிவிலும் இருந்தது. அதே சமயம், 7 இடங்களில் காற்றின் தரம் மிதமான பிரிவில் இருந்தது. 
இதற்கிடையே, அடுத்து வரும் இரண்டு நாள்களில் காற்றின் தரத்தில் பிஎம் 2.5 நுண் துகள்களின் தாக்கத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் அடுத்து வரும் இரண்டு நாள்களிலும் காற்றின் தரம் மோசமான பிரிவிலும், மிகவும் மோசமான பிரிவிலும் நீடிக்கும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com