யூனிடெக் இயக்குநர்களுக்கு திகார் சிறையில் எல்இடி டிவி, தனி அலுவலக அறை: ஆய்வு நடத்திய நீதிபதி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தருவதில் முறைகேடு செய்ததாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தருவதில் முறைகேடு செய்ததாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூனிடெக் இயக்குநர் சஞ்சய் சந்திரா , அவரது சகோதரர் அஜய் ஆகியோரது சிறையில் எல்இடி டிவி, இளநீர், ஏராளமான மினரல் குடிநீர் பாட்டீல்கள், பாட்மிண்டன் விளையாட்டு ராக்கட்டுகள், கணினி வசதியுடன் கூடிய தனி அலுவலக அறை ஆகியவை உள்ளதாக ஆய்வு நடத்திய நீதிபதி ரமேஷ் குமார் தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் சந்திரா சகோதரர்கள் போன்ற மெத்த படித்த கைதிகள் திகார் சிறையில் சொகுசு வாழ்க்கை அனுபவித்து வருவதாக குற்றம்சாட்டி, கைதிகள் சிலர் அண்மையில் தில்லி உயர்நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், "நிதி மோசடி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கைதிகள் திகார் சிறையில் சொகுசு வாழ்க்கை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு தனியாக விஐபி வார்டு உள்ளது. சிறிய பிரச்னைக்கும் சிறப்பு மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகிறது. ஆனால், சாதாரண கைதிகளுக்கு போதிய உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருள்களே கிடைப்பதில்லை' என்று குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த கடிதத்தை பொதுநல வழக்காக பதிவு செய்து விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், திகார் சிறையில் ஆய்வு நடத்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ராமேஷ் குமாருக்கு உத்தரவிட்டது. செப்டம்பர் 4ஆம் தேதி அவர் திகார் சிறையில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், "சஞ்சய் சந்திரா சகோதரர்கள் சிறையில் எல்இடி டிவி, இளநீர், ஏராளமான மினரல் குடிநீர் பாட்டீல்கள், பாட்மிண்டன் விளையாட்டு ராக்கட்டுகள், வீட்டு உபயோக பொருள்கள், இண்டர்நெட் வசதியுடன் கூடிய கணினியுடன் தனி அலுவலக அறை, அதில் பிரிண்டரும் உள்ளது. சிறையின் கதவு, ஜன்னல்கள் திரையிடப்பட்டுள்ளது. 
இது சிறைத் துறை டிஜி, உயரதிகாரிகளின் தலையீடு அல்லது கவனத்துக்கு வராமல் நடந்திருக்காது. இதில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்கலாம். ஆகையால், சிறைத் துறை டிஜி மீதும் உயரதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். புகார் கடிதம் எழுதிய கைதிகள் மண்டோலி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கைதிகளும், சிறப்பு  வசதிகள் அளிக்காத காரணத்தால் கைதிகள் சிலர் இதுபோன்ற புகார் கடிதங்களை அனுப்பி வருவதாக சிறைத் துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்தர் மேனன் தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் குறித்து தில்லி அரசு, திகார் சிறைத் துறை டிஜி, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com