குழந்தை இலக்கியத்தை தாய்மொழியில் கற்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்: கிருங்கை சேதுபதி

குழந்தை இலக்கியத்தை குழந்தைகள் தாய்மொழியில் கற்பதற்கான வசதியை  ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்

குழந்தை இலக்கியத்தை குழந்தைகள் தாய்மொழியில் கற்பதற்கான வசதியை  ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று எழுத்தாளர் கிருங்கை சேதுபதி வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகள் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதெமியின் பால புரஸ்கார் விருது தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் கிருங்கை சேதுபதி எழுதிய "சிறகு முளைத்த யானை' நூலுக்கு வழங்கப்பட்டது. இதையொட்டி, தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் சனிக்கிழமை அவருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. 
இந்நிகழ்வில் கிருங்கை சேதுபதி பேசியதாவது: தமிழில் சங்க காலத்தில் இருந்து சிறுவர் இலக்கியம் உள்ளது. இடைக்காலத்தில் உருவான ஒளவையாரின் 'கொன்றை வேந்தன்',   குழந்தைகளுக்கு நீதி புகட்டும் சிறுவர் இலக்கியமாக உள்ளது. குழந்தைகள் மனதைப் புரிந்து கொண்டு குழந்தைகளுக்காக இலக்கியம் படைத்தவர் மகாகவி பாரதியார் ஆவார். அவரின் பாப்பா பாட்டு,  குழந்தை இலக்கியத்தின் உச்சம் ஆகும். பாரதிக்கு சற்று முன்பு தோன்றிய கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, குழந்தைகள் இலக்கியத்துக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கினார்.  குழந்தைகளுக்கான மொழியில் குழந்தைகளுக்கான உலகத்தை அவர் காட்டினார்.
அழ.வள்ளியப்பாவின் காலம் குழந்தைகள் இலக்கியத்தில் பொற்காலம் எனக் கூறலாம். தேசிய அளவில் குழந்தைகளுக்கான புத்தகத் திருவிழாவை நடத்தி, குழந்தைகள் இலக்கியத்தை அவர் ஊக்குவித்தார்.  மேலும், அவரது காலத்தில் தோன்றிய சிறுவர் இதழ்கள்,  சிறுவர் இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றின. மிகக் குறைந்த விலையில் குழந்தைகள் இலக்கிய இதழ்கள் விற்பனை செய்யப்பட்டன.
குழந்தைகள் இலக்கியம் குழந்தைகளால் உருவாக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன். குழந்தைகளாக இருந்து குழந்தை இலக்கியங்கள் படைத்தவர்கள் பிற்காலத்தில் சிறந்த எழுத்தாளர்களாக மாறினார்கள். என்னை சிறுவயதில் அடையாளம் கண்டு ஊக்குவித்த ஆசிரியர்கள் எனது வளர்ச்சியில் பெரும் பங்காற்றினர். குழந்தைகள் இலக்கியத்தை குழந்தைகளிடம்  சேர்க்க வேண்டும். பாடப் புத்தகத்தை வேதப் புத்தகமாகப் பார்க்கும் காலத்தில், பாடப் புத்தகம் தாண்டிய வாசிப்பை விரிவுபடுத்தும் புத்தகங்களை சிறுவர்கள் தேடி வாசிக்க வேண்டும். குழந்தைகளின் வாசிப்பு விரிவடையும் போது, அவர்கள் வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்குவர். மேலும்,  குழந்தை மனதுடன் இந்த உலகத்தை எதிர்கொள்ள குழந்தை இலக்கியங்கள் உதவுகின்றன.
நூலகங்களில் நல்ல குழந்தை இலக்கியங்கள் இடம் பெற வேண்டும். வகுப்பறைகளில் விளையாட்டுக்கென நேரம் ஒதுக்குவது போல, வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்கப்பட வேண்டும். 
தாய்ப்பால் போல குழந்தைகளுக்கு தாய்மொழி இன்றியமையாதது. குழந்தைகள், குழந்தை இலக்கியத்தை அவரவர் தாய்மொழியில் கற்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். ஏ.பி.ஜே. அப்துல்கலாம், எழுத்தாளர் சுஜாதா ஆகியோர் தாய்மொழியில் கற்றவர்கள் என்றார் கிருங்கை சேதுபதி.
இதைத் தொடர்ந்து, "இன்பமே எந்நாளும்' என்ற தலைப்பில் முனைவர் சி.அருணனின் சொற்பொழிவு இடம் பெற்றது. இதையடுத்து,  கன்னியாகுமரி மாவட்ட கிராமியக் கலைஞர்கள் நலச் சங்கக் கலைஞர்களின் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில், தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன், செயற்குழு உறுப்பினர் எம். ஆறுமுகம், வ.உ.சி.யின் பேரன் முத்துகுமாரசுவாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com