சுஷில் அன்சாலுக்கு கடவுச்சீட்டு: அதிகாரிகள், காவல்துறை மீது வெளியுறவுத் துறை குற்றச்சாட்டு

தில்லி உபஹார் திரையரங்கு தீ விபத்து வழக்கு குற்றவாளி சுஷில் அன்சாலுக்கு, முறையான விசாரணையின்றி 

தில்லி உபஹார் திரையரங்கு தீ விபத்து வழக்கு குற்றவாளி சுஷில் அன்சாலுக்கு, முறையான விசாரணையின்றி கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கப்பட்டதாகவும், இதற்கு கடவுச்சீட்டு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரே காரணம் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உபஹார் திரையரங்கு தீ விபத்து வழக்கு குற்றவாளியான தொழிலதிபர் சுஷில் அன்சாலுக்கு,  கடவுச்சீட்டு புதுப்பிக்கப்பட்டதில் முறையான நடைமுறை பின்பற்றப்படவில்லை; அவர் 2 கடவுச்சீட்டு வைத்துள்ளார் என்று கூறி, அந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரின் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, வெளியுறவுத் துறை இணைச் செயலர் (வளைகுடா பிரிவு) சார்பில் நீதிபதி நஜ்மி வாஜிரி முன் சனிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2000, 2004 ஆகிய ஆண்டுகளில் சுஷில் அன்சாலின் கடவுச்சீட்டில் கூடுதல் பக்கங்கள் இணைக்கப்பட்டன. இதற்கு காவல்துறை மூலம் சரிபார்ப்பு பணி மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. எனினும், முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இதேபோல், 2013-இல் புதிய கடவுச்சீட்டு கோரி சுஷில் விண்ணப்பித்தபோது, காவல்துறையிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டது. அதில், எந்த ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், அவர் மீதான குற்றம் நிரூபணம் குறித்தோ, இதர வழக்குகள் நிலுவையில் இருப்பது குறித்தோ எந்த தகவலும் இடம்பெறவில்லை. அப்படியொரு அறிக்கையை காவல்துறையினர் எப்படி வழங்கினர்? என்பது குறித்து தெரியவில்லை.
இதனிடையே, 2017-இல் சுஷில் அன்சால் தாமாக முன்வந்து, தனது கடவுச்சீட்டை ஒப்படைத்தார். குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை குறிப்பிடாமல் கவனக்குறைவுடன் செயல்பட்டதாக அவர் விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதேவேளையில், சுஷில் குமார் 2 கடவுச்சீட்டு வைத்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று வெளியுறவுத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com