தொழிற்சாலையில் தீ விபத்து: 4 பேர் சாவு

மத்திய தில்லி, கரோல் பாக் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

மத்திய தில்லி, கரோல் பாக் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக உடல் பருமன் மிக்க நபர் ஓடிய போது, பாதையில் சிக்கிக் கொண்டதால் மற்றவர்கள் தீயில் சிக்கி உயிரிழக்க நேரிட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையின் உயர் அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்ததாவது: 
கரோல் பாக்கில் பீடோன்புரா பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் துணிகளை நீராவி இயந்திரம் மூலம் தேய்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துணிகளை சலவை செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கரைப்பான் எதிர்பாராத விதமாக தரை மீது சிந்தியது. இதையடுத்து, அப்பகுதியில் மதியம் 12.23 மணிக்கு தீ பற்றியது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. இதனிடையே, தீ விபத்து நிகழ்ந்ததும் கதவு அருகே அமர்ந்திருந்த உடல் பருமன்மிக்க நபர் அங்கிருந்து வெளியேறும் கதவு வழியாக தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, அதில் அவர் சிக்கிக் கொண்டார். 
இதனால், கட்டடத்தில் இருந்த மற்ற நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில் பகன் பிரசாத் (55), ஆர்.எம். நரேஷ் (40), ஆர்த்தி (20), ஆஷா (40) ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், அஜீத் (25) என்பவர் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
நீராவி மூலம் ஆடையை தேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு கன்டெய்னரில் வைக்கப்பட்டிருந்த கரைப்பான் கீழே சிந்தியதாகவும், அது நீராவியுடன் தொடர்பு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அந்த அதிகாரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com