18 நவம்பர் 2018

இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

DIN | Published: 12th September 2018 01:06 AM

ஈரானிலுள்ள சபாஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான உரிமையை இந்தியாவிடம் ஒப்படைப்பது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மூன்று நாடுகளுக்கிடையேயான முதலாவது முத்தரப்பு பேச்சுவார்த்தை, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே, ஈரான் சார்பாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அப்பாஸ் அரகச்சி, ஆப்கானிஸ்தான் சார்பாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஹெக்மத் கலில் கர்சாய் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
3 நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது. மேலும், சபாஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான உரிமையை இந்தியாவிடம் விரைவில் ஒப்படைப்பது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, போதைப் பொருள்களை ஒழிப்பதில் ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் சமரசத்தை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அடுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை, 3 நாட்டு அதிகாரிகளுக்கும் உகந்த நேரத்தில், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா விதிக்கவுள்ள பொருளாதாரத் தடை குறித்தும், ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இயக்கும் உரிமையை இந்தியாவிற்கு அளிப்பது குறித்தும், ஏற்கெனவே இந்தியாவுடன் இணைந்து ஈரானின் தெற்கு கடலோரப் பகுதியில், அந்நாடு கட்டி வரும் மற்றொரு துறைமுகம் குறித்தும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் துறைமுகங்களை இயக்குவதில் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்தும், அதனைச் சமாளிப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் அமெரிக்க அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சபாஹர் துறைமுகத்தின் முக்கியத்துவம் குறித்தும், ஆப்கானிஸ்தானுடன் வணிகத் தொடர்பு மேற்கொள்வதற்கு இத்துறைமுகம் முக்கிய வழிவகுக்கும் என்றும், அத்துறைமுகத்திலிருந்து 80 கிமீ தொலைவில், சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் துறைமுகம் குறித்தும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் சபாஹர் துறைமுகக் கட்டுமானம் மற்றும் அதனை இயக்குவதற்கான உரிமையை 10 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் இந்தியாவுக்கு அளிக்க, கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தான் வழியாக இந்தியாவுடன் வணிகம் செய்ய ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு பாகிஸ்தான் அனுமதி அளிக்க மறுத்ததைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 
இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகள் வணிகத் தொடர்பை மேம்படுத்திக் கொள்ளவும், மற்ற மத்திய ஆசிய நாடுகளுடன் வணிகத்தை மேம்படுத்திக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக இந்தத் துறைமுகம் திகழ உள்ளது.
 

More from the section

குழந்தை இலக்கியத்தை தாய்மொழியில் கற்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்: கிருங்கை சேதுபதி
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆம் ஆத்மி வரவேற்பு


எஸ்டிஎம்சி பகுதிகளில் இரவு 10 மணிக்கு பிறகு
ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

சுஷில் அன்சாலுக்கு கடவுச்சீட்டு: அதிகாரிகள், காவல்துறை மீது வெளியுறவுத் துறை குற்றச்சாட்டு
உணவகத்தில் தீ விபத்து