18 நவம்பர் 2018

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

DIN | Published: 12th September 2018 01:04 AM

 

பெட்ரோல்-டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

தில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை பூஜா மகாஜன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலையை இஷ்டம் போல் உயர்த்திக் கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதேநேரத்தில், கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலின்போது பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றியமைக்கும் நடவடிக்கையை 22 நாள்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச காரணிகளே காரணம் என்று மத்திய அரசு தவறான தகவலை பரப்பி வருகிறது. 

இதுதொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் முன்பு வழக்குத் தொடுத்தேன். அதை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசை அணுகும்படி கேட்டுக் கொண்டு, எனது வழக்கை தள்ளுபடி செய்தது. இதன்படி, மத்திய அரசை நான் அணுகினேன். ஆனால், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் ஆகியோரைக் கொண்ட அமர்வால் செவ்வாய்க்கிழமை பரிசீலிக்கப்பட்டது. அப்போது அந்த மனு மீது புதன்கிழமை (செப்.12) விசாரணை  நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. 

More from the section

குழந்தை இலக்கியத்தை தாய்மொழியில் கற்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்: கிருங்கை சேதுபதி
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆம் ஆத்மி வரவேற்பு


எஸ்டிஎம்சி பகுதிகளில் இரவு 10 மணிக்கு பிறகு
ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

சுஷில் அன்சாலுக்கு கடவுச்சீட்டு: அதிகாரிகள், காவல்துறை மீது வெளியுறவுத் துறை குற்றச்சாட்டு
உணவகத்தில் தீ விபத்து