வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

மாநகராட்சிகளை தில்லி அரசு ஏமாற்றி வருகிறது: மேயர்கள் குற்றச்சாட்டு

DIN | Published: 12th September 2018 12:59 AM

தில்லி மாநகராட்சிகளை கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு ஏமாற்றி வருவதாக மேயர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) மேயர் பிபின் பிகாரி சிங் குற்றம் சாட்டியுள்ளார். 
இது தொடர்பாக கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) மேயர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:  தில்லி அரசு சுமார் ரூ.1,200 கோடியை கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு வழங்க வேண்டும். இந்த நிதி வழங்கப்படாததால், மாநகராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் சுகாதாரப் பணிகள், டெங்கு, மலேரியா தடுப்புப் பணிகள் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளன. அண்மையில், தில்லி மாநகராட்சி மேயர்கள் தில்லி முதல்வரைச் சந்தித்தபோது மிக விரைவில் நிதி ஒதுக்கப்படும் என கேஜரிவால் உறுதியளித்தார். ஆனால், அந்த நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என்றார் அவர். 
வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) மேயர் ஆதேஷ் குப்தா கூறியதாவது: தில்லி 4-ஆவது நிதிக் குழு பரிந்துரைகளின்படி, வடக்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.1,493 கோடி நிலுவையில் உள்ளது. நிதிப் பற்றாக்குறை காரணமாக, மாநகராட்சியின் மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை நீர் வடிகால்களைத் தூர் வார முடியவில்லை. மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க நிதி தேவை. நிதி வழங்குவதாக உறுதியளித்த கேஜரிவால் இன்னும் நிதி ஒதுக்கவில்லை. தில்லி மாநகராட்சிகளை தில்லி அரசு ஏமாற்றி வருகிறது என்றார் அவர்.

More from the section

சுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூருக்கு சில ஆவணங்களை
அளிக்க போலீஸுக்கு உத்தரவு

விடுமுறை பயணச் சலுகை:  மத்திய அரசு புதிய அறிவிப்பு வெளியீடு
"ரஃபேல், கடன் தள்ளுபடி:  தொடர்ந்து பொய் கூறுகிறார் ராகுல்'


ஒரே நபருக்கு பல ஓட்டுநர் உரிமங்கள் விநியோகம்: தடுப்பதற்கு தரவுத்தளம் அமைக்கிறது மத்திய அரசு

கிங் ஃபிஷர் நிறுவனத்தின் 2 ஹெலிகாப்டர்கள் ஏலம்