வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

மோமோ சேலஞ்ச்: பெற்றோர்களுக்கு மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்

DIN | Published: 12th September 2018 12:59 AM

"மோமோ சேலஞ்ச்' போன்ற அபாயகரமான விளையாட்டுகளில் தங்களது குழந்தைகள் ஈடுபடாததை உறுதி செய்யும் வகையில் அவர்களின் சமூக ஊடக நடவடிக்கைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 
இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மோமோ சேலஞ்ச் என்ற ஆபத்தான விளையாட்டு, சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. தங்கள் குழந்தைகள் அந்த விளையாட்டில் ஈடுபடுகின்றனரா என பெற்றோர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். 
தங்கள் குழந்தைகள் அந்த விளையாட்டைப் பற்றி அறிந்திருக்காத பட்சத்தில், பெற்றோர்கள் தாங்களாக அந்த விளையாட்டு பற்றி குழந்தைகளை எச்சரிக்கக் கூடாது. மோமோ சேலஞ்ச் என்ற அந்த விளையாட்டு, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துவதில் தொடங்கி, தற்கொலை செய்யத் தூண்டும் வகையில் அபாயகரமான விதிகளைக் கொண்டதாகும்.
இந்த விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளை சில நடவடிக்கைகள் மூலமாக அடையாளம் காணலாம். அந்தக் குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள். எப்போதும் அமைதியான மனநிலையிலேயே இருப்பார்கள். அவர்களது உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள் உள்ளிட்ட தழும்புகள் இருக்கலாம்.
இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, அவர்களது சமூக வலைதள நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மீட்க நிபுணத்துவம் பெற்ற குழந்தைகள் நல ஆலோசகர்களையும் நாடலாம். குழந்தைகள் பயன்படுத்தும் செல்லிடப்பேசிகளில் புதிதாக எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் பதியப்பட்டுள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும். 
மேலும், பெற்றோரது ஆதரவும், அன்பும் குழந்தைகளுக்கு எப்போதும் உள்ளது என்பதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது. 

More from the section

காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டி: ஒமர் அப்துல்லா சூசகம்
குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் தென்னாப்பிரிக்க அதிபர்?
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க சட்டம்: விஜேந்தர் குப்தா வலியுறுத்தல்
பெண் ஆடை வடிவமைப்பாளர், வீட்டுப் பணியாளர் கொலை: ஊதியம் வழங்காததால் கொலை செய்ததாக 3 பேர் சரண்
தில்லிக்கு ரியல் எஸ்டேட்  ஒழுங்குமுறை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்