தில்லியில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்: ரேவரி பாலியல் பலாத்கார சம்பவத்துக்குக் கண்டனம்

ரேவரி பகுதியில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கக்

ரேவரி பகுதியில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கக் கோரியும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தில்லியில் உள்ள ஹரியாணா மாநில பவன் முன் திங்கள்கிழமை பல்வேறு பெண்கள் உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
ஹரியாணா மாநிலம் ரேவரியைச் சேர்ந்த 19 வயது பெண் அண்மையில் தனிப் பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்த போது இருவரால் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இப்பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்திச் சென்ற நபர்கள் மயக்க மருந்து கலந்த பானத்தைக் குடிக்கச் செய்தனர். பின்னர், வயலில் உள்ள ஆழ்துளைகிணறு அருகே இருந்த அறைக்கு தூக்கிச் சென்று, தங்களது நண்பர்களை அந்த இடத்திற்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸார் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் உள்பட 3 பேரை கைது செய்தனர். ராணுவ வீரர் உள்பட பிற குற்றவாளிகளையும் கைது செய்ய பல இடங்களிலும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பெண், பள்ளியில் சிறந்த வகையில் படித்தமைக்காக குடியரசுத் தலைவரின் விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் பெண்ணுக்கு நீதி கிடைக்க கோரியும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தில்லியில் உள்ள ஹரியாணா மாநில பவன் முன் திங்கள்கிழமை பல்வேறு பெண்கள் உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 
இதில் பங்கேற்ற அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கத்தைச் (ஏஐபிடபிள்யூஏ) சேர்ந்த ஷீனா ஷிப்பர் கூறுகையில், "இந்த வழக்கில் இன்னும் சிலர் தலைமறைவாகவே உள்ளனர். குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாத போலீஸாரின் தோல்வியானது, இந்த விவகாரத்தில் அரசின் உணர்வின்மையைக் காட்டுவதாக உள்ளது. இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ராணுவ வீரர். அவரைத் தண்டிக்க முடியாவிட்டால், நமது அமைப்பு முறையின் நம்பிக்கைதான் என்ன?' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com