அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி நவம்பர் 2 முதல் அமல்: கால அவகாசத்தை நீட்டித்தது இந்தியா

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருள்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி விதிப்பு

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருள்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி விதிப்பு வரும் நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த 1976ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்பி முறையின்கீழ், அமெரிக்க சந்தையில் இந்தியாவிலுள்ள கெமிக்கல், என்ஜினியரிங் சம்பந்தப்பட்ட 3,500 தயாரிப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் பொருள்களுக்கு விதிக்கப்படும்  வரிகளை அதிகரிப்பது என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி முடிவெடுத்தார். 
இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள், பாதாம், வால்நட் உள்ளிட்ட 29 வகை பொருள்கள் மீது கூடுதல் வரிகளை ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் விதிப்பது என்று இந்தியா முடிவெடுத்தது. 
இதன்பின்னர் இந்த கூடுதல் வரி விதிப்பு முடிவை செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அமல்படுத்துவது என்று இந்தியா அறிவித்தது.
இந்நிலையில், மத்திய வருவாய்த் துறை அலுவலகம் திங்கள்கிழமை இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவு,  நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த வர்த்தக துறை அதிகாரிகள், வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
இதுவரை இருதரப்பு அதிகாரிகளும் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில், இந்திய அதிகாரிகள் தரப்பில் இந்தியாவின் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றுக்கு உயர் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 
அமெரிக்க தரப்பில், இந்தியாவின் விவசாயம், மருந்து சாதனங்கள் உள்ளிட்ட உற்பத்தி துறை தயாரிப்பு சந்தைகளில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் 47.9 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 
அதேவேளையில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் 26.7 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையான வர்த்தகமானது, இந்தியாவுக்கு சாதமாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com