கழிவுநீர் மூலம் உயிரி எரிபொருள் தயாரிக்கும் திட்டம்: முதல் முறையாக தில்லியில் ஹர்ஷ் வர்தன் தொடக்கம்

கழிவுநீரை சுத்திகரித்து சுத்தமான நீர், உயிரி எரிபொருள் எடுக்கும் திட்டத்தை தில்லியில் மத்திய அறிவியல்

கழிவுநீரை சுத்திகரித்து சுத்தமான நீர், உயிரி எரிபொருள் எடுக்கும் திட்டத்தை தில்லியில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
நாட்டிலேயே முதல் முறையாக இந்தத் திட்டம் தில்லியில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஹர்ஷ் வர்தன் மேலும் கூறுகையில், "கழிவுநீரை எப்படி லாபகரமானதாக மாற்ற முடியும் என்பதை உயிரி தொழில்நுட்பத்துறை நிரூபித்துள்ளது. பாரபுல்லா கால்வாயில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீரை சுத்திகரித்து சுத்தமான நீர் எடுக்கப்படும். அந்த நீரை சமையல் அறை, பூங்கா, கழிவரை ஆகிய பகுதிகளில் பயன்படுத்தலாம். கழிவுநீரில் இருந்து எடுக்கப்படும் கார்பன் மூலம் உயிரி எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. 
இந்தத் திட்டம் ஆரம்ப நிலையில் உள்ளது. சன் டையல் பார்க் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் ஆராய்ச்சி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இது ஒரு மாதிரி திட்டமாக அமையும். பிரதமர் மோடி துவக்கி வைத்த தூய்மை இந்தியா திட்டத்தின் இலக்கை இந்தத் புதிய திட்டத்தின் மூலம் எட்டலாம்' என்றார்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ள ரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐசிடி) போராசிரியர் ஒருவர் கூறுகையில், "தில்லி, மும்பை ஆகிய பெரிய நகரங்களில் 99 சதவீத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சரியாக இயங்குவதில்லை. காரணம் இந்த நிலையங்களுக்கான மின் கட்டணங்களை மாநகராட்சிகளால் செலுத்த முடிவதில்லை. ஆகையால், பொருளாதாரத்தை ஈட்டும் சுத்திகரிப்பு நிலையங்களாக மாற்றும் வகையில் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கார்பன் எரிக்கப்படுகிறது. ஆனால், இந்த புதிய தொழில்நுட்பத்தில் கார்பனை பிரித்து உயிரி எரிபொருளாக மாற்றப்படுகிறது. உலகிலேயே இந்த தொழில்நுட்பம் முதல் முறையாக செயல்படுத்தப்படுகிறது' என்றார்.
இந்தியா - டட்ச் நாடுகளின் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் ஓராண்டுக்கு முன்னர் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டு வந்தது. தில்லி மேம்பாட்டு ஆணையத்துடன் (டிடிஏ) உயிரி தொழில்நுட்பத் துறை இணைந்து பாரபுல்லா கால்வாயில் இருந்து வரும் கழிவுநீரை சுத்தப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக சன் டையல் பார்க் பகுதியில் 200 சதுர மீட்டர் பரப்பளவிலான இடத்தை 5 ஆண்டுகளுக்கு உயிரி தொழில்நுட்ப துறைக்கு குத்தகைக்கு டிடிஏ வழங்கி உள்ளது. 
சன் டையல் பார்க்கில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் 10 லட்சம் லிட்டர் கழிவுநீரில் இருந்து சுத்தமான நீரையும், 3 டன் உயிரி எரிபொருளும் தயாரிக்கும் திறன் படைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com