அங்கீகாரமற்ற பரிசோதனைக் கூடங்கள்: ஒரு தீவிரப் பிரச்னையாகும்: உயர் நீதிமன்றம்

தலைநகர் தில்லியில் செயல்பட்டு வரும் அங்கீகாரமற்ற பரிசோதனைக் கூடங்கள் மற்றும் கிளினிக்குகள்

தலைநகர் தில்லியில் செயல்பட்டு வரும் அங்கீகாரமற்ற பரிசோதனைக் கூடங்கள் மற்றும் கிளினிக்குகள் ஒரு தீவிரப் பிரச்னையாகும் என உயர் நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், இவற்றைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்றப்படும் வரை எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தில்லி அரசு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, "தில்லியில் சட்டவிரோதமாகச் செயல்படும் பரிசோதனைக் கூடங்கள் மற்றும் கிளினிக்குகளை ஆய்வு நடத்தி, அவற்றை யார் நடத்தி வருகின்றனர். எந்த சட்டத்தின் கீழ் அவை அமைக்கப்பட்டு வருகின்றன என்பதைக் கண்டறிய வேண்டும். மேலும், இது தொடர்பாக சட்டங்கள் உருவாக்கப்படும் வரை இவற்றை ஒழுங்குபடுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பிரமாணப் பத்திரமாக நீதிமன்றத்தில் தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும். பரிசோதனைக் கூடங்களை ஒழுங்குபடுத்த உருவாக்கப்பட்டு வரும் சட்டத்தை இறுதிப்படுத்துவது தொடர்பான நிலவர அறிக்கையை ஆறு வாரங்களில் நீதிமன்றத்தில் தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக, இந்த வழக்கில் ஆஜரான தில்லி அரசின் கூடுதல் வழக்குரைஞர் சஞ்சய் கோஸ், "இந்த விவகாரத்தில் சட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. பங்குதாரர்களின் கருத்துகள் பெற வேண்டியிருக்கிறது' என்றார். இதைத் தொடர்ந்து மேற்கண்ட உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்து. 
இந்த விவகாரம் தொடர்பாக தில்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பேஜன் குமார் மிஸ்ரா என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "தில்லியில் அங்கீகாரமற்ற பரிசோதனைக் கூடங்கள் தகுதியில்லாத தொழில்நுட்பனர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதனால், இதுபோன்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்த ஒரு கொள்கைத் திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த விவகாரத்தை கையாளுவதற்கு "கிளினிக்கல் எஸ்டாப்லிஸ்மென்ட் சட்டம் (பதிவு ஒழுங்குமுறை சட்டம், 2001)' அமல்படுத்துவதற்கான ஒரு மாற்று வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். தகுதியற்ற தொழில்நுட்பனர்கள் பரிசோதனையை மேற்கொள்வது மட்டுமின்றி அறிவியல் அல்லாத, தகுதியில்லாத முடிவுகளின் அடிப்படையில் ஒப்புதலையும் அளித்து வருகின்றனர். இது மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றை பாதிப்புக்கு உள்ளாகச் செய்யும். பரிசோதனையில் ஏற்படும் சிறிய தவறுகூட உயிருக்கு அச்சுறுத்தலாகவும், நோயாளிகளுக்கு முரண்பட்ட சிகிச்சையை அளிக்க வழிவகுத்துவிடும். 
தில்லியில் இதுபோன்று 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான பேத்தாலஜிக்கல் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. காளான்கள் போல முளைத்துவரும் இதுபோன்ற சட்டவிரோத பரிசோதனைக் கூடங்களை நிறுத்த உரிய உத்திகளோ அல்லது வழிமுறையோ தில்லி அரசிடம் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com