கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்குதல்: 5 தொழிலாளிகள் இறந்த சம்பவத்தில் மேலும் இருவர் கைது

தில்லி மோதி நகரில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்றபோது விஷ வாயு தாக்கி 5 தொழிலாளர்கள்

தில்லி மோதி நகரில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்றபோது விஷ வாயு தாக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேற்கு தில்லி,  மோதி நகர் பகுதியில் உள்ள (டிஎல்எஃப்) குடியிருப்பு சொஸைட்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிக்குள் இறங்கி  பராமரிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக  கடந்த 9-ஆம் தேதி தொழிலாளர்கள் ஐந்து பேர் சென்றனர். 
அப்போது,  விஷவாயு தாக்கி அவர்கள் மயக்கமடைந்தனர்.  அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 
அவர்களில் 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டதும்,  3 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததும் பரிசோதனையில் தெரிய வந்தது. அவர்கள் சர்ஃப்ராஜ்,  பங்கஜ்,  ராஜா,  உமேஷ், விஷால் ஆகியோர்  எனத் தெரிய வந்தது.  இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மூன்று  நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் ஆணையருக்கு தில்லி தொழிலாளர் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக செப்டம்பர் 10-ஆம் தேதி மேற்பார்வையாளரை போலீஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில்,  மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஜேஎல்எல் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் டி.என். மிஸ்ரா,  உதவி மேலாளர் பரத் ராஜ் வர்மா ஆவர். இவர்கள் இருவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு செயல்பாடுகளை கவனித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com