பறவையை காப்பாற்ற நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை!

காலிந்த் குஞ்ச் மெட்ரோ ரயில் நிலைய தண்டவாளத்தில் கிடந்த பறவையைக் காப்பாற்ற தில்லி மெட்ரோ மெஜன்டா வழித்தட சேவை திங்கள்கிழமை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

காலிந்த் குஞ்ச் மெட்ரோ ரயில் நிலைய தண்டவாளத்தில் கிடந்த பறவையைக் காப்பாற்ற தில்லி மெட்ரோ மெஜன்டா வழித்தட சேவை திங்கள்கிழமை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து வனவாழ்வு எஸ்ஓஎஸ் அமைப்பின் மேலாளர் வாஸிம் அக்ரம் கூறுகையில், "மெஜன்டா வழித்தடத்தில் ஒரு பறவை பறக்க முடியாமல் இருப்பதாகவும், அவ்வழியாக செல்லும் ரயில்களில் அது அடிபட்டு உயிரிழக்கக் கூடும் என்றும் ரயில் ஓட்டுநர் ஒருவர் தகவல் அளித்ததாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் இருந்து தகவல் வந்தது. இதையடுத்து, எங்கள் அமைப்பைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்துக்கு சென்று அந்தப் பறவையை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.
"இந்தியன் கார்மோரன்ட்' எனும் இந்தவகை பறவைகள் மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தப் பறவை காலிந்த் குஞ்ச் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ஓக்லா பறவைகள் சரணாயத்துக்கு வந்து இங்கு சிக்கிக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்' என்றார்.
குரங்கு புகுந்ததால் அச்சம்: எல்லோ லைன் மெட்ரோ வழித்தடத்தில் உள்ள ஆஸாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் குரங்கு புகுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், "சுரங்க வழித்தடத்தில் உள்ள ஆஸாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென குரங்கு புகுந்து நடைமேம்பாலப் பகுதிகளில் உலாவிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட பயணிகள் முதலில் அச்சமடைந்தனர். பின்னர் சிஐஎஸ்எப் படையினரும், தில்லி மெட்ரோ ரயில் ஊழியர்கள் அந்தக் குரங்கை அங்கிருந்து வெளியே பாதுகாப்பாக துறத்தினர். இந்தச் சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை' என்றார். 
தில்லி மெட்ரோ ரயிலில் குரங்கு பயணம் செய்யும் விடியோ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வைரலானது. மெட்ரோ ரயிலில் புகுந்த ஒவ்வொரு பெட்டியாக செல்லும் அந்தக் குரங்கு பின்னர் மனிதர்களைப் போல் காலியாக இருக்கும் இருக்கையில் அமர்ந்துவிட்டு பின்னர் ரயில் நின்றதும் கீழே இறங்கிவிடுகிறது. 
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பலர் பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தனர். சிலர் நகைச்சுவையாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com