சீலீங் மீதான உத்தரவு மீறல்: மனோஜ் திவாரிக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

தேசியத் தலைநகர் தில்லியில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் சீலிடப்படுவது தொடர்பான உத்தரவை மீறியதாகக் கூறப்படும்

தேசியத் தலைநகர் தில்லியில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் சீலிடப்படுவது தொடர்பான உத்தரவை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரியை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கண்டித்தது. "நாடாளுமன்ற உறுப்பினருக்கு சட்டத்தை தன் கையில் எடுக்கும் சுதந்திரம் கொடுக்கப்படவில்லை' என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
வட கிழக்கு தில்லி கோகுல்புரி பகுதியில் கிழக்கு தில்லி மாநகராட்சியால் சீலிடப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக தலைவரும் வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான மனோஜ் திவாரி செப்டம்பர் 25-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் அவதூறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் மனோஜ் திவாரி ஆஜரானார். 
அப்போது, "ஆயிரக்கணக்கான சட்டவிரோத கட்டுமானங்களைக் கண்காணிப்புக் குழு சீலிடவில்லை' எனும் மனோஜ் திவாரியின் பேட்டி தொடர்பாக இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு கவலை தெரிவித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மனோஜ் திவாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
நீதிபதி மதன் பி லோகுர் தனது உத்தரவில் தில்லி சீலிங் விவகாரம் தொடர்பாக செய்தி சானலுக்கு மனோஜ் திவாரி அளித்த பேட்டி தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் எஸ். அப்துல் நஜீர், தீபக் குப்தா ஆகியோர், "உங்கள் (திவாரி) விடியோ பதிவில் (சி.டி.) ஆயிரக்கணக்கான இடங்கள் சீலிடப்பட வேண்டியுள்ளதாக கூறியிருக்கிறீர்கள். அந்த இடங்களின் பட்டியலை எங்களிடம் தாருங்கள். நாங்கள் உங்களை சீலிங் அதிகாரியாக உருவாக்குவோம்' என்றனர்.
மனோஜ் திவாரி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விகாஷ் சிங், "பூட்டப்பட்ட சீல் ஏதும் பாஜக தலைவரால் உடைக்கப்படவில்லை. ஒரு எம்பியாக இருக்கும் அவர், எப்போதும் சீலிங் நடவடிக்கையில் இடையூறு ஏற்படுத்தியதில்லை. இந்த விவகாரத்தில் விரிவான பதில் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு, நீதிபதிகள் "நாங்கள் உங்களைத்தான் கேட்கிறோம். நீங்கள் சி.டி.யை பார்த்தீர்களா? அந்த சி.டி.யில் தில்லியில் ஆயிரக்கணக்கான இடங்கள் சீலிடப்பட வேண்டியுள்ளது என்று அவர் கூறுகிறார். அவர் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக உள்ளார். அது சட்டத்தை அவரது கைகளில் எடுக்கும் சுதந்திரத்தை தரவில்லை' என்று தெரிவித்தனர். மேலும், மனோஜ் திவாரியை அடுத்த விசாரணை நடைபெறும் அக்டோபர் 3-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டனர்.
பின்னணி: வடகிழக்கு மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினராக மனோஜ் திவாரி இருந்து வருகிறார். இவர் வடகிழக்கு தில்லியில் கோகுல்புரியில் ஒரு பகுதியில் சீலிடப்பட்ட பூட்டை உடைத்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக கிழக்கு தில்லி மாநகராட்சி சார்பில் மனோஜ் திவாரிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார், சீலிங் விவாரத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில், தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தொடர்புடையதாகக் கூறப்படும் விடியோ பதிவையும் (சி.டி) அளித்தார். மேலும் அவர் கூறுகையில், கிழக்கு தில்லி மாநகராட்சி அளித்த புகாரின் பேரில் மனோஜ் திவாரி உள்ளிட்டோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சீலிடப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்ததாக மனோஜ் திவாரிக்கு எதிராக நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் மனோஜ் திவாரியை உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 25-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அவதூறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர்.

விடியோ பதிவில் (சி.டி.) ஆயிரக்கணக்கான இடங்கள் சீலிடப்பட வேண்டியுள்ளதாக மனோஜ் திவாரி கூறியிருக்கிறார். அந்த இடங்களின் பட்டியலை எங்களிடம் தாருங்கள். நாங்கள் உங்களை சீலிங் அதிகாரியாக உருவாக்குவோம். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அது சட்டத்தை அவரது கைகளில் எடுக்கும் சுதந்திரத்தை தரவில்லை.
- நீதிபதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com