புதிய வடிவில் பொதுப் போக்குவரத்து அட்டை: தில்லி அரசு திட்டம்

தில்லி டிடிசி பேருந்துகள் மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் தில்லி மெட்ரோ ஸ்மார்ட் அட்டையைப் பயன்படுத்தி

தில்லி டிடிசி பேருந்துகள் மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் தில்லி மெட்ரோ ஸ்மார்ட் அட்டையைப் பயன்படுத்தி பயணிகள் பயணம் செய்து வரும் நிலையில், "ஒன்' எனும் புதிய வடிவில் இந்த அட்டையைப் அறிமுகப்படுத்த தில்லி அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த "ஒன்' அட்டையைப் பிரபலப்படுத்தும் வகையில் பேருந்து பயணங்களில் 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கவும் தில்லி அரசு திட்டமிட்டு வருகிறது.
நிகழாண்டு ஜனவரியில் 250 பேருந்துகளில் தில்லி அரசு பொதுப் பயன்பாட்டு அட்டைப் பயன்பாடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அட்டையை தில்லி மெட்ரோ ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் பயன்படுத்த முடியும். இதன் மூலம் இந்த வசதி உள்ள லண்டன், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவற்றின் வரிசையில் தில்லியும் இடம் பெற்றது. நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த வசதியானது தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) 3,882 பேருந்துகளிலும், கிளஸ்டர் திட்டத்தில் 1,757 பேருந்துகளிலும் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, தில்லி அரசானது பொதுப் போக்குவரத்து அட்டையை "ஒன்' என்ற புதிய பெயரில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. 
இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறையின் அதிகாரி கூறியதாவது: இது தொடர்பாக நாங்கள் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் (டிஎம்ஆர்சி) ஒப்பந்தம் செய்துள்ளோம். விரைவில் புதிய "ஒன்' அட்டையில் தில்லி மெட்ரோ மட்டுமின்றி டிடிசி, தில்லி அரசு ஆகியவற்றின் இலச்சினை இடம் பெறும். இதன் மூலம் பயணிகள் இந்த அட்டைகளை பேருந்துகளிலும் பயன்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வைப் பெறுவர். பயணிகளுக்கு பொதுப் போக்குவரத்து விருப்பத் தேர்வு வசதி இருப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தில்லி மெட்ரோ அட்டைகள் மறு விளம்பரம் செய்யப்படுகிறது என்றார் அந்த அதிகாரி. தற்போது ஸ்மார்ட் அட்டைகள் தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டுமே வாங்கவும், ரீச்சார்ச் செய்யவும் முடியும். இந்த வசதியானது பேருந்து பணிமனைகள், முனையங்கள், ஐஎஸ்பிடி, ரயில் நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
கஷ்மீரி கேட், சராய் காலே கான், ஆனந்த் விஹார் ஆகிய பரபரப்பாகக் காணப்படும் ஐஎஸ்பிடி பேருந்து நிலையங்களில் இந்தப் பொதுப் போக்குவரத்து அட்டைகளை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. டிடிசி மற்றும் கிளஸ்டர் திட்டப் பேருந்துகள் மின்னணு டிக்கெட்டிங் இயந்திரங்களுடன் (இடிஎம்) இணைக்கப்பட்டுள்ளது. பேருந்துகளிலும் இந்த அட்டையைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் தில்லி அரசானது பொதுப் போக்குவரத்து அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு பேருந்து கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி அளிப்பது குறித்தும் திட்டமிட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com