வீடுகளுக்கான மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம்: தில்லி அமைச்சரவை ஒப்புதல்

வீடுகளுக்கான மேற்கூரை சூரிய மின் சக்தி திட்டத்துக்கு தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வீடுகளுக்கான மேற்கூரை சூரிய மின் சக்தி திட்டத்துக்கு தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் கேஜரிவால் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கியத் திட்டங்களுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் விவரங்கள் குறித்து தில்லி அரசு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குழும வீட்டு வசதி சொஸைட்டியின் வீட்டு நுகர்வோர்களின் மேற்கூரைக்கான முக்கிய மந்திரி சூரிய மின்சக்தி திட்டம் குறித்த மின்சாரத் துறையின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேவை நிறுவன (ஆர்இஎஸ்சிஓ) மாதிரியின்கீழ் சூரிய மின்தகடுகளை நிறுவ வீட்டு நுகர்வோர் பணம் ஏதும் செலவழிக்கத் தேவையில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை அளிக்கும் நிறுவனங்கள் இந்தப் பணியை மேற்கொள்ளும்.
குழும வீட்டு வசதி சொஸைட்டிக்கான சூரிய மின்சக்தி செலவானது ஒரு யூனிட்டுக்கு ரூ.1 ஆக இருக்கும். ஒரு யூனிட்டுக்கு தில்லி அரசு மானியமாக ரூ.2 வழங்கும் என்பதால் மின் கட்டணம் குறைவாக உள்ளது. தொடக்கத்தில் ஒரு யூனிட் சூரிய மின்சக்திக்கு செலவு ரூ.3 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சூரிய மின்சக்திக்கான செலவானது சூரிய மின் தகடுகளை நிறுவுவதற்காக அளிக்கப்படும் இடத்தைப் பொறுத்துஅமையும். அவர்களின் தேவையைவிட சூரிய மின்தகடுகளுக்கான கூடுதல் இடம் அளிக்கப்படும்பட்சத்தில் சூரிய மின்சக்திக்கான விலையில் கிடைக்கும் குறைப்பு பலன்கள் சொஸைட்டி குடியிருப்போருக்குக் கிடைக்கும். தில்லியில் சூரிய மின்சகத்தி மேம்பாட்டில் குடியிருப்பு செக்டார் பெரிய அளவில் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. இதற்கான சாத்தியக்கூறு அதிகளவில் உள்ளது. ஆனால், இத்துறையில் இதுவரை சூரிய மேம்பாடு மேற்கொள்ளப்படவில்லை.
தில்லி சூரியசக்தி கொள்கைத் திட்டத்தின்படி, 2016-17 முதல் 2018 -19-ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் காலத்திற்காக சூரிய மின்சக்தி உற்பத்திக்கு, உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் தொகையாக (ஜிபிஐ) ஒரு யூனிட்டுக்கு ரூ.2-ஐ தில்லி அரசு வழங்கி வருகிறது. இத்தொகையை மின்விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்ஸ்) வருடாந்திர அடிப்படையில் வழங்கி வருகின்றன. மின் விநியோக நிறுவனங்களுக்கு இத்தொகையை செலவீட்டுத் தொகையாக மின்சாரத் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
தில்லியில் தோராயமாக 100 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இவை டிஎம்ஆர்சி (20 மெகாவாட்), தில்லி ஜல் போர்டு, தில்லி தொழில்நுட்ப நிறுவனம், இந்திரப் பிரஸ்தா பல்கலைக்கழகம், அரசுப் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் உள்ளிட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. 
பணியின் போது உயிரிழக்கும் சீருடைப் பணியாளர்களின் குடும்பத்தினர், ஊர்க்காவல் படையினர், தில்லி போலீஸார், போரில் காணாமல் போனவர்கள், போர்க் கைதிகள், போரில் ஊனமுற்றோர், போரில் உயிரிழந்தவர்களின் மனைவி ஆகியோருக்கு கருணைத் தொகை வழங்குவதற்கான திட்டத்தில் திருத்தம் செய்யும் வருவாய்த் துறையின் முன்மொழிவுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தவிர முக்கியப் பிரபலங்களின் பிறந்தநாள், நினைவு நாள் கொண்டாட்டத்திற்கான திட்டத்தை அமல்படுத்துவதற்காக சமூக நலத் துறையின் முன்மொழிவுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோன்று, தில்லி மாநில சுகாதார இயக்கத்தின் (டிஎஸ்எச்எம்) கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மருத்துவ அதிகாரிகள், சிறப்பு மருத்துவர்கள் ஆகியோருக்கான மாதாந்திர மதிப்பூதியத்தை அதிகரிப்பதற்கான சுகாதாரத் துறையின் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதேபோன்று, டிஎஸ்எச்எம் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியத்தை அதிகரிப்பதற்கான சுகாதாரத் துறையின் முன்மொழிவுக்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தில்லி அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கைலாஷ் கெலாட், ராஜேந்தர் பால் கௌதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com