விதி மீறும் பேருந்துகள் மீது நடவடிக்கை: தில்லி போக்குவரத்து துறை முடிவு

தில்லியில் விதிகளை மீறி இயக்கப்படும் பேருந்துகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க தில்லி

தில்லியில் விதிகளை மீறி இயக்கப்படும் பேருந்துகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க தில்லி போக்குவரத்து துறையின் அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது.
அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் மற்றும் உரிய பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் வாகனங்கள் மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தில்லி அரசின் மூத்த அதிகாரி கூறியதாவது:
தில்லியில் இயக்கப்படும் பேருந்துகள் அவற்றின் உரிய பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக பல புகார்கள் வருகின்றன. அதேபோன்று, அதிக வேகத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் புகார்கள் வரப் பெற்றுள்ளன. இதனால், இத்தகைய பேருந்துகள் மீது கண்காணிப்பு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்' என்றார். 
இது தொடர்பாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், " பேருந்து நிறுத்தங்களில் ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தாமல் செல்லும் பிரச்னையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) அண்மையில் ஒரு செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி மூலம் தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் பேருந்துகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பயணிகள் புகார் அளிக்க முடியும்.
எனினும், தில்லி ஒருங்கிணைந்த பன்மாதிரி போக்குவரத்து அமைப்பு மூலம் செயல்படுத்தப்படும் கிளஸ்டர் பேருந்துகளுக்கு இது போன்ற செயலி வசதி இல்லை.
இதுகுறித்து அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், " தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் செயலியின் செயல்பாடு குறித்து ஆராயப்படும். அதன் பிறகு, தேவைப்படும்பட்சத்தில் கிளஸ்டர் பேருந்துகளுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படும்.
தில்லி போக்குவரத்து துறையின் புள்ளிவிவரத் தகவல்படி கிளஸ்டர் பேருந்துகள் அதிக வேகம் மற்றும் அஜாக்கிரதையான வேகம் காரணமாக சாலைகளில் தொந்தரவு ஏற்படுத்தி வருகின்றன. தில்லி போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பேருந்துகள் உள்பட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களின் இயக்கம் கண்காணிக்கப்படுகின்றன என்றார்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், "பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் அதாவது மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தைவிட செல்வதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றை கண்டறியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பேருந்துகள் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாக புகார்கள் உள்ளன' என்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com