கரோல் பாக் தீ விபத்து எதிரொலி: ஹோட்டல்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தில்லி அரசு முடிவு

தில்லியில் உள்ள ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் ஆகியவற்றில் மொட்டை மாடி, பாதை, படிகள்

தில்லியில் உள்ள ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் ஆகியவற்றில் மொட்டை மாடி, பாதை, படிகள் போன்ற இடங்களில் தீப்பற்றக்கூடிய பொருள்களை அகற்ற அவற்றின் உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. 
இதன்படி, அடுத்த இரு வாரங்களில் ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்களில் உள்ள நடைபாதை, படிகள், மொட்டை மாடிகள் ஆகியவற்றில் இருந்து வரவேற்பு தரைவிரிப்புகள், மரச்சாமான்கள், மர பொருள்கள், தவறான உட்கூரைகள் ஆகியவற்றை அகற்ற கேட்டுக்கொள்ளப்பட உள்ளது. 
கரோல் பாக் பகுதியில் ஹோட்டலில் நிகழ்ந்த தீ விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை தில்லி அரசு மேற்கொள்ள உள்ளது.
தில்லி கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் ஹோட்டலில் கடந்த 12-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று தமிழர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தீப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத 70 ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்ட தடையின்மைச் சான்றிதழை ரத்து செய்து தில்லி அரசு நடவடிக்கை எடுத்தது.
இதைத் தொடர்ந்து, மேலும் பல கட்டுப்பாடுகளை ஹோட்டல்களுக்கு தில்லி அரசு விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, தில்லி அரசின் உள்துறை முதன்மைச் செயலர், தில்லி தீயணைப்பு பணிகள் துறையின் இயக்குநர் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில், இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஹோட்டல், விருந்தினர் இல்லங்களில் படிக்கட்டு செல்லும் நுழைவுவாயில் பகுதியில் தீத் தடுப்பு வசதியை அமைக்கவும், புகை செல்வதற்கான வழியை ஏற்படுத்தவும், கார்பன் மோனாக்ஸைடு வாயுவை கண்டறியும் கருவியை நிறுவிடவும், எச்சரிக்கை கருவிகளைப் பொருத்தவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
அதேபோன்று, கட்டட துணை விதிகளில் மாற்றம் செய்வதற்கான ஆலோசனைகள் அடங்கிய ஒரு வரைவு முன்மொழிவை தயாரிக்குமாறும் தீயணைப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
கரோல் பாக் பகுதி ஹோட்டல் தீ விபத்து சம்பவத்தின்போது அங்குள்ள பாதைகள், மாடிப் படிகள் மோசமாக சேதமடைந்திருந்ததாகவும், தீப்பற்றக்கூடிய பொருள்களை அதிகமாக பயன்படுத்தியதன் காரணமாக இந்நிகழ்வு ஏற்பட்டது தெரியவந்ததாகவும், உள்ளே இருந்தவர்களை தீயில் இருந்து காப்பாற்ற கண்ணாடி ஜன்னல்களை மீட்புக் குழுவினர் உடைக்க வேண்டியிருந்ததாகவும் போதிய காற்றோட்டமின்மையே இதற்கு காரணமாக இருந்ததாகவும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உள்துறைக்கு எழுதியுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் பயன்படுத்தப்படாமல் அல்லது வைக்கப்படாமல் இருந்திருந்தால் குறைந்த எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்திருக்கும். மேலும், கார்பன் மோனாக்ஸைடு அப்பகுதியில் பரவியிருந்ததன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் இறந்திருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், தீப்பாதுகாப்பு விஷயத்தில் அரசு சமரசம் செய்துகொள்ளாது. தங்களது இடத்தில் இருந்து வர்த்தக ரீதியில் வருவாய் ஈட்டுவோர் மனிதர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
தில்லி தீயணைப்புப் பணிகள் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "குடியிருப்புப் பகுதியில் தங்குமிட வசதி வழங்கும் உரிமத்துடன் கட்டப்பட்டுள்ள 1,700 விருந்தினர் இல்லங்கள், சுமார் 1,200 ஹோட்டல்கள், மத்திய தில்லியில் உள்ள கரோல் பாக், பாஹர் கஞ்ச், படேல் நகர், ராஜேந்திர நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. கரோல் பாக் பகுதியில் மட்டும் 300 விருந்தினர் இல்லங்களை ஆய்வு செய்யுமாறு தீயணைப்புத் துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com