தில்லியில் ஆவின் பால் விநியோக திட்டம்: அமைச்சர் டி.கே. ராஜேந்திர பாலாஜி தகவல்

புது தில்லியில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டு வருகிறது என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

புது தில்லியில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டு வருகிறது என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 
தில்லி கரோல் பாகில் ஆவின் நிறுவனம் சார்பில் ஆவின் பால் பொருள்கள் விற்பனையகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி இந்த புதிய ஆவின் பாலகத்தை திறந்துவைத்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
தமிழகத்தில் பல்வேறு பால் நிறுவனங்களிடையே முதன்மையாக இருந்துவரும் அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் சார்பில் கரோல் பாக்கில் ஆவின் நவீன பாலகம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கிராமப்புற விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் ஆகியோர் பொருளாதாரத்திலும், வாழ்க்கைத் தரத்திலும் முன்னேற பல திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. பால்வளத் துறையில் தமிழகம் இரண்டாம் வெண்மைப்புரட்சியைக் கண்டு வருகிறது.
2015-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் (ஆவின்) நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 29 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல், நிகழாண்டில் நாளொன்றுக்கு 33.50 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.270 கோடி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால், கிராமப்புற பொருளாதாரம் மிகச்சிறந்த முறையில் உயர்வு பெற்று வருகிறது. 
அதுபோல 2015-ஆம் ஆண்டில் தினமும் 18 லட்சம் லிட்டராக இருந்த பால் விற்பனை, நிகழாண்டில் நாளொன்றுக்கு 22.50 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மாதந்தோறும் ரூ. 250 கோடி மதிப்பிலான பால், ரூ. 25 கோடி மதிப்பிலான பல்வேறு வகை ஆவின் பால் உபபொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார் நாடுகளில் ஆவின் பால் 
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இதுவரை 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதர வளைகுடா நாடுகளிலும் ஆவின் பால் ஏற்றுமதி தொடர்பான பூர்வாங்கப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. 
கரோல்பாக் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள ஆவின் நவீன பாலகத்தின் மூலம் நெய், பால்பவுடர், குலோப்ஜாமூன், , இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்கள் கிடைக்கும். அடுத்த கட்டமாக ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இருந்து பால் கொண்டு வந்து இங்கு விற்பனை செய்யப்படும். இதை தில்லி மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
அதிமுக - பாமக கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "அதிமுக - பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. மாவட்டம், மாநிலத்தின் சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு கட்சியும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு மீது பாமக கட்சி இதுவரை எவ்வித பெரிய குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் நல்ல செயல்கள் நடைபெற உறுதுணையாக இருப்போம் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதே கருத்தை முதல்வரும் கூறியுள்ளார். ஆகவே, இக்கூட்டணி கொள்கை ரீதியிலான கூட்டணியாகும். இரு கட்சிகளின் தொண்டர்களும் அரவணைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக-பாஜக- பாமக கட்டணி பலமாக அமைந்துள்ளதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இது, அவரது பேச்சில் வெளிப்பட்டு வருகிறது' என்றார். 
முன்னதாக, திறப்பு விழாவில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஹித்தேஷ் குமார் எஸ். மக்வானா, துணை உள்ளுறை ஆணையர் என்.இ. சின்னத்துரை, பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை இயக்குநரும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குநருமான சி. காமராஜ், ஆவின் பொது மேலாளர் ஆர்.எஸ். புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com