மோடி-சவூதி இளவரசர் கூட்டறிக்கை: காங்கிரஸ் விமர்சனம்; மெஹபூபா, ஒமர் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி, சவூதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையை

பிரதமர் நரேந்திர மோடி, சவூதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
தில்லியில் பிரதமர் மோடியை சவூதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை இருநாடுகளும் கண்டிக்கின்றன. பயங்கரவாதத்தை அரசு கொள்கையாக பயன்படுத்துவதை அனைத்து நாடுகளும் கைவிட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தானின் பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை. இதை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது:
மோடி அவர்கள் கடந்த 18ஆம் தேதி பேசுகையில், பாகிஸ்தானுடன் இனி பேச்சு இல்லை; நடவடிக்கை எடுக்க நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலோ, இந்தியாவும், பாகிஸ்தானும் பேச வேண்டும், 2014ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுதொடர்பான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என மோடி தெரிவித்திருந்தார். அதேநேரத்தில், கூட்டறிக்கையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் பெயரை குறிப்பிட பிரதமர் மறந்து விட்டார்.
பாகிஸ்தானுடன் நட்புறவை ஏற்படுத்த 2014ஆம் ஆண்டு மே முதல் பிரதமர் தொடர்ந்து எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாக சவூதி அரேபியா இளவரசர் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற நிபந்தனைகள் உருவாக்கப்படுவது அவசியம் என்று இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது என்று சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி, சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "போர் மேகம் சூழ்ந்த நிலையில், இந்தியா-சவூதி அரேபியா கூட்டறிக்கையில், பாகிஸ்தான்-இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற நிபந்தனைகள் விதிக்கப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது வரவேற்கக் கூடிய நடவடிக்கையாகும். அதேபோல், இருநாடுகளும் பரஸ்பரம் முதலீடு செய்யவும் வாக்குறுதியளித்துள்ளன. இதுவும் வரவேற்கக் கூடிய நடவடிக்கையாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில், "கூட்டறிக்கையில் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் எனத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இந்தியா-பாகிஸ்தான் உறவை முன்னெடுத்து செல்ல பேச்சுவார்த்தைதான் ஒரே வழி, இதற்கான உகந்த சூழலை இந்தியா, பாகிஸ்தான் உருவாக்க வேண்டும் என மோடி அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதைதான் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த நாங்களும் தெரிவித்து வருகிறோம். 
இதே கருத்தை எங்களில் யாரேனும் தெரிவித்தால், தேச விரோதிகள் எனவும், பாகிஸ்தான் ஏஜெண்டுகள் எனவும் தெரிவிக்கின்றனர். ஆனால் மத்திய அரசு, 3ஆவது நாட்டுடன் வெளியிடும் கூட்டறிக்கையில், இதை தெரிவிக்கும்போது, தேசபக்தி, தேசியவாதம் எனத் தெரிவிக்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com