தில்லி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்: 88 சதவீத அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், கணினி வசதி

தில்லியில் 88 சதவீதம் அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், கணினி வசதிகள் இருப்பதாக தில்லி பொருளாதார ஆய்வறிக்கையில்


தில்லியில் 88 சதவீதம் அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், கணினி வசதிகள் இருப்பதாக தில்லி பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், துணைநிலை ஆளுநர் உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
இதையடுத்து, கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான சனிக்கிழமை தில்லியின் பொருளாதார ஆய்வறிக்கையை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை தில்லி அரசு கணிசமான அளவு அதிகரித்துள்ளது. 2014-15-இல் கல்வித் துறைக்கு  ரூ.6,555 கோடி நிதி  ஒதுக்கப்பட்டது. 
இது  2018-19  நிதியாண்டில்  இரு மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ.13,997 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போதுள்ள பள்ளிகளில் 8,095 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.  88 சதவீத அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், கணினி வசதி உள்ளன. கல்வித் துறைக்கு  பட்ஜெட்டில் தொடர்ந்து 27.36 சதவீதம் அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
மேலும், சமூகப் பாதுகாப்பு, நலத் திட்டங்களுக்கு 16.63 சதவீதம்; மருத்துவம், பொது சுகாதாரத்துக்கு 14.81 சதவீதம்; வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சிக்கு 14.12 சதவீதம்; போக்குவரத்துத் துறைக்கு 11.67 சதவீதம்; குடிநீர் விநியோகம், துப்புரவுப் பணி உள்ளிட்டவற்றுக்கு 10.68 சதவீதம் நிதி  பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரம்: குடியிருப்புக்கு அருகாமையில் சுகாதாரத்தை அளிக்கும் வகையில் மொஹல்லா கிளினிக் திட்டத்தை தில்லி அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை 189 மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 2014-15இல் ரூ. 2,116 ஆக இருந்த சுகாதாரத்துக்கான தனிநபர் செலவினம், 2017-18இல்  ரூ.2,493 ஆக அதிகரித்துள்ளது. 
சமூக பாதுகாப்பு, சமூக நலம்: 60 முதல் 69 வயதுடைய முதியவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் நிதியுதவி, 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ. 2,500 என்ற வீதத்தில் மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 82,339 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 கோடி வாகனங்கள்
2018, மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி தில்லியில் மொத்தம் 1.09 கோடி வாகனங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட  5.81 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி  பேஸ் 1, பேஸ் 2, பேஸ் 3 என மூன்று கட்டங்களாக  மொத்தம் 252 கி.மீ. நீளத்துக்கு  வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  200 தில்லி போக்குவரத்து நிறுவனப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும்,  மகளிரின் பாதுகாப்புக்காக தில்லி போக்குவரத்து நிறுவனப் பேருந்துகளில் 2,153 மார்ஷல்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் அதிகரிப்பு
2014-15 இல் 37,484 மில்லியன் யூனிட்டுகளாக இருந்த  மின் விநியோகம், 2017-18-இல் 38,510 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. 2017-18இல் மொத்த மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 57.55 லட்சம் ஆகும். சூரிய மின் சக்தி உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில் முதலமைச்சர் வேளாண்மை மற்றும் சூரிய மின் சக்தி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தில்லியின் பொருளாதாரத்தில் 2-ஆவது மிகப்பெரிய பங்களிப்பை உற்பத்தித் துறை அளித்து வருகிறது. உற்பத்தித் துறையின் வருவாய் 2011-12இல் ரூ.18,907 கோடியாக இருந்தது. இது 2018-19  நிதியாண்டில் ரூ.40,557 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. தில்லியில் 2014-இல் 8,968 ஆக இருந்த தொழிற்கூடங்களின் எண்ணிக்கை, 2017-இல் 9,059 ஆக அதிகரித்தது. இதன் மூலம் 2014-இல் 4,16,927 பேர் பணிபுரிந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும்  2017-இல் 4,20,156 ஆக அதிகரித்தது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் வருமானம் 3 மடங்கு அதிகம்
 2018-19 நிதியாண்டில் தில்லியின் மொத்த உற்பத்தி 8.61 சதவீதம் அதிகரித்து, ரூ. 7,79,652 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. நிகழ் நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ.3,65,529 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான ரூ. 1,25,397 -ஐ விட  மூன்று மடங்கு அதிகமாகும். 2017-18  நிதியாண்டில்  வசூலிக்கப்பட்ட மொத்த வரி 14.7 சதவீதமாகும். இது 2016-17 நிதியாண்டை விட 3.03 சதவீதம் அதிகமாகும். 2017-18 நிதியாண்டில் உபரி வருவாய் ரூ. 4,913 கோடியாக உள்ளது. சமூக சேவைத் துறைகளுக்கு செலவுத் தொகை கடந்த 2014-15 இல் 68.71 சதவீதமாக இருந்தது. இது 2015-16 நிதியாண்டில் ரூ. 74.76 சதவீதமாக உயர்ந்தது. இந்நிலையில், 2018-19 பட்ஜெட்டில் சமூக சேவைத் துறைகளுக்கு பல்வேறு திட்டங்களுக்கான நிதி 83.60 சதவீதம் அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், வனம், வேளாண்மை: தில்லியின் வனம், மரங்கள் உள்ள பகுதி 2017 -இல் 305.41 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. இது 2015-இல் 299.77 சதுர கிலோ மீட்டராக இருந்தது. இதேபோல தில்லியின் பசுமைப் பகுதி 20.2 சதவீதத்திலிருந்து 20.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வீட்டு வசதி, குடிநீர் விநியோகம்: தில்லியில் 83.42 சதவீதம் குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.  தில்லியில் 675 குடிசைப் பகுதிகள் உள்ளன. அவற்றில் அமைந்துள்ள 3.06 லட்சம் குடிசைகளின் மொத்த அளவு சுமார் 799 ஹெக்டேர் ஆகும். மேலும்,  12,000 குடியிருப்புகள் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com