புதுதில்லி

தில்லியில் மீண்டும் கடுமையான பிரிவில் காற்று மாசு!

DIN

தில்லியின் காற்றின் தரம் வியாழக்கிழமை கடுமை எனும் நிலைக்கு கீழிறங்கியது. காற்றின் வேகம் குறைந்ததன் காரணமாக மாசுபடுத்திகள் பரவல் தடுக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 
இது தொடர்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில், தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 434 எனும் அளவில் கடுமை பிரிவில் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 100 முதல் 200 வரை இருந்தால் "மிதமான' பிரிவிலும் 201 - 300 "மோசம்', 301- 400 "மிகவும் மோசம்', 401 முதல் 500 வரை இருந்தால் "கடுமையான' பிரிவிலும் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை வரை காற்றின் தரம் மிகவும் மோசம் எனும் பிரிவில் நீடித்தது. அதன்பிறகு காற்றின்வேகம் மணிக்கு 20 கிலோ மீட்டராக அதிகரித்ததால் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் ஏற்பட்டு மோசம் எனும் பிரிவுக்குச் சென்றது. இந்நிலைமை செவ்வாய்க்கிழமை வரை நீடித்தது. இந்நிலையில், காற்றின் வேகம் குறைந்ததால் புதன்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் எனும் பிரிவுக்குச் சென்றது. வியாழக்கிழமை தலைநகரில் காற்றின் தரம் கடுமை பிரிவில் நிலவியது. சுமார் 29 இடங்களில் இந்த நிலை காணப்பட்டது. மூன்று இடங்களில் மிகவும் மோசம் பிரிவில் நிலவியது.
தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் உள்ள காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் கடுமையான பிரிவிலும், குர்கான் பகுதியில் மிகவும் மோசம் எனும் பிரிவிலும் பதிவாகியது. பி.எம். 2.5 நுண்துகள் 365 எனும் அளவிலும், பி.எம். 10 நுண்துகள் 540 என்ற அளவிலும் பதிவாகி இருந்ததாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் (சஃபர்) வெளியிட்டுள்ள தகவலில் தில்லியில் வியாழக்கிழமை ஒட்டுமொத்த காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகியுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 5.6 கிலோ மீட்டரில் இருந்து 2.5 கிலோ மீட்டராகக் குறைந்துள்ளது. தவிர, இதர வானிலை சூழல்கள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். இந்த சூழல் காற்றில் உள்ள மாசுபடுத்திகளை பரவச் செய்வதற்கு போதுமானதாகும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

வெப்பநிலை மேலும் குறைந்தது
தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. மேலும், குளிர் காற்றும் வீசியது. இந்நிலையில், வெப்பநிலை இரண்டாவது நாளாக மேலும் குறைந்தது. தில்லியில் கடந்த வார இறுதியில் மழை பெய்ததன் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை 5-8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 17-23 டிகிரி செல்சியஸாகவும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.
இந்நிலையில், புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. வியாழக்கிழமை வெப்பநிலை மேலும் குறைந்து, குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி குறைந்து 4.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 டிகிரி உயர்ந்து 22.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது என சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல பாலத்தில் 6.5 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், பல்வேறு இடங்களில் காண்பு திறனும் குறைவாக இருந்தது. காலை 8.30 மணியளவில் சஃப்தர்ஜங்கில் காண்புதிறன் 400 மீட்டர், காலை 7.30 மணியளவில் பாலத்தில் 250 மீட்டர் என பதிவாகியிருந்ததாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளி விவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர்-தில்லி துரந்தோ எக்ஸ்பிரஸ், பூர்வா எக்ஸ்பிரஸ், பிம்மபுத்திரா மெயில் உள்பட 11 ரயில்கள் சுமார் 2-3 மணி நேரம் தாமதமாக சென்றதாக வடக்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT