காற்றின் தரக் குறியீட்டை அறியாதவர்கள் 93% பேர்!

தலைநகர் தில்லியில் வசித்து வருவோரில் 93 சதவீதம் பேருக்கு காற்றின் தரக் குறியீடு என்பதன் பொருள் என்ன என்பது தெரியவில்லை என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது


தலைநகர் தில்லியில் வசித்து வருவோரில் 93 சதவீதம் பேருக்கு காற்றின் தரக் குறியீடு என்பதன் பொருள் என்ன என்பது தெரியவில்லை என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
தில்லியில் குளிர் காலத்தில் காற்று மாசு அதிகரிப்பதால் மக்களுக்கு பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதையொட்டி, காற்று மாசு குறித்தும், அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வாகனப் புகையின் காரணமாக காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாகப் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டுகளில் தனியார் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்தத் திட்டம் வெற்றிகரமாகத் தொடரவில்லை. தற்போது காற்று மாசை தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், காற்று மாசுவைக் குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகின்றன.
இந்நிலையில், தில்லியில் அதிக அளவில் காற்று மாசு நிலவும் 10 இடங்களில் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய குடியிருப்போர் இணை நடவடிக்கை கூட்டமைப்பும், ஏஆர்கே பவுண்டேஷனும் இணைந்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு தில்லியில் காற்று மாசு பிரச்னை அதிகம் நிலவும் பகுதிகளான ஆனந்த் விஹார், அசோக விஹார், துவாரகா, ஐடிஓ, லோதி ரோடு, பட்பர்கஞ்ச், ரோஹிணி, ஆர்.கே. புரம், ஸ்ரீஃபோர்ட், பவானா ஆகிய 10 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பலதரப்பட்டவர்களிடம் கேள்விகள் மூலம் கருத்துகள் பெறப்பட்டன.
இதில் காற்றின் தரக் குறியீடு என்பதன் பொருள் என்ன என்பது குறித்து 93 சதவீதம் பேர் அறிந்திருக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காற்றின் தரத்தைக் குறிப்பிடும் அளவுகளான மிதமான பிரிவு, மோசம், மிகவும் மோசம், கடுமையான பிரிவு ஆகியவை குறித்தும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நகரின் பல்வேறு இடங்களில் காற்றின் தரக் கண்காணிப்புக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. அந்தக் கருவிகள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் சுமார் 2 கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களிடம் கேள்வி பதில் அடிப்படையில் கருத்துகள் பெறப்பட்டன. ஆனால், இந்தக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது குறித்தும், அதற்கான காரணம், அது தொடர்பான மற்ற அம்சங்கள் குறித்தும் 89 சதவீதம் பேருக்கு தெரியவில்லை என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
மேலும், காற்றின் தரம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நகரில் பல்வேறு இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் நகரில் நிலவும் காற்று மாசுவின் அளவு அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 88 சதவீதம் பேர் நகரில் நிறுவப்பட்டுள்ள எல்இடி திரைகளை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், தில்லியில் நிலவும் காற்றின் தரம் குறித்த கேள்விக்கு 71 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
காற்று மாசுவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக 58 சதவீதம் பேர் தெரிவித்தனர். அதே சமயம், பாதிப்பை எதிர்கொள்ளவில்லை என்று 42 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
காற்று மாசுவால் மூச்சுப் பிரச்னையை எதிர்கொண்டு வருவதாக 28 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். காற்று மாசு பிரச்னை காரணமாக தோல் நோயில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு கூடுதல் கவனம் செலுத்துவதாக 20 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவை தவிர, நகரில் நிலவும் அடர் பனிமூட்டம் காரணமாக மனத்தளவில் சோர்வடைவதாக 16 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com