தெற்கு தில்லியில் இறைச்சிக் கடைகளுக்கு கட்டுப்பாடு

பாஜக ஆளும் தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இறைச்சிக்


பாஜக ஆளும் தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இறைச்சிக் கடைகளுக்கும் கோயில்களுக்கும் இடையே உள்ள தூரம் அதிகரிக்கப்படவுள்ளது.
இறைச்சிக் கடைளுக்கான சுகாதார உரிமம் வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட கொள்கை முடிவுக்கு அதிகாரமிக்க மாநகராட்சிக் நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், மநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கடைகளுக்கும், அப்பகுதிகளில் உள்ள கோயில்களுக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட தூரம் இடைவெளி இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
சிவிக் சென்டரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெற்கு தில்லி மாநகராட்சியின் நிலைக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பல்வேறு கொள்கைகள் தொடர்பான திருத்தங்களுக்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திருத்தங்களுக்கு தெற்கு தில்லி மாநகராட்சி ஒப்புதல் அளிக்க வேண்டும்.
நிலைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இந்த திருத்தப்பட்ட கொள்கையின்படி, இறைச்சிக் கடை உரிமையாளர்கள் முதலில் அந்தப் பகுதியில் இறைச்சிக் கடை செயல்படுவதற்கான ஒப்புதலை கவுன்சிலர்களிடம் பெற வேண்டும். அப்போது இறைச்சிக் கடை செயல்படும் இடத்தின் அளவு தெரிவிக்கப்பட வேண்டும.
அந்த உரிமம் பெறுவதற்கு போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது தெரிய வந்தால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இவை தவிர உரிமம் பெறுவதற்காக பதிவுக் கட்டணமும் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அதே போன்று, உரிமத்தைப் புதுப்பிப்பிதற்கான கட்டணமும் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இது தொடர்பான முன்மொழிவுகளும் நிலைக் குழுக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், திறந்தவெளிகளில் மீன், கோழி, எருமைக் கறி உள்ளிட்ட இறைச்சிகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் அனுமதிக்கப் படாது என்று நிலைக் குழு தெரிவித்துள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட கொள்கை முடிவின் படி கோயில்கள் , குருத்வாராக்கள், மயானங்கள் உள்ளிட்டவற்றுக்கும், இறைச்சிக் கூடங்களுக்கும் இடையே உள்ள தூர அளவு கட்டாயமாக்கப்படுகிறது. ஆலயங்கள் மற்றும் ஆன்மிக இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டுதான் இனிமேல் இறைச்சிக் கடைகளுக்கு உரிமங்கள் வழங்கப்படும். 
இவற்றுக்கு இடைப்பட்ட தூரம் 100 மீட்டரிலிருந்து 150 மீட்டராக உயர்த்தப்படுகிறது. இந்த இடைவெளி, கடை அமைந்துள்ள சாலை அல்லது நடைபாதையிலிருந்து கணக்கில் கொள்ளப்படும்.
இதில் 150 மீட்டர் இடைவெளி என்பது மசூதிகளுக்கு அருகில் அமைக்கப்படும் பன்றி இறைச்சிக் கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதே சமயம், ஆடு, கோழி, மீன், எருமை உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் இறைச்சிக் கடைகள் மசூதியிலிருந்து 100 மீட்டருக்குள் இருந்தாலும் உரிமங்கள் வழங்கப்படும். ஆனால், இதற்கு மசூதிகளின் இமாம் மற்றும் நிர்வாகக் குழுவின் அனுமதி பெறுவது அவசியம்.
மேலும், உயிருடன் உள்ள விலங்குகள் மற்றும் தோல்கள், எலும்புகள் ஆகியவற்றை இறைச்சிக் கடைகளில் சேமித்து வைக்கவும் அனுமதிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் ஷிக்கா ராய் கூறுகையில், மாநகராட்சிப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள தொலைபேசி கோபுரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். 
மேலும், தொலைபேசி கோபுரங்கள் நிறுவும் விஷயத்தைப் பொருத்தமட்டில், ஏற்கெனவே தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பழைய வழக்குகளுக்கு முடிவு காணாமல் புதிய தொலைபேசி கோபுரங்கள் நிறுவுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு தில்லி மாநகராட்சியில் குறிப்பாக ஹெளஸ்காஸ், நியூ பிரண்டஸ் காலனி, கிரீன் பார், லாஜ்பத் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இறைச்சி சார்ந்த உணவுகளுக்கு பெயர் போன உணவகங்கள் ஏராளமாக உள்ளன.
தெற்கு தில்லி மாநகராட்சியில் செயல்படும் இறைச்சிக் கடைகளின் முன்பகுதியில் திறந்தவெளியில் சமைத்த, சமைக்கப்படாத இறைச்சிகளை விற்பதற்கு 2017-ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அப்போது அதற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com