பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபட்டுவிடும்: கேஜரிவால்

மதம், மொழியின் பெயரால், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது; மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாடு பிளவுபட்டுவிடும்'


மதம், மொழியின் பெயரால், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது; மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாடு பிளவுபட்டுவிடும்' என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் கேஜரிவால் பங்கேற்றார். மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கேஜரிவால் பேசியதாவது:
முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துகளை திருப்பும் செயலில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மதம், மொழியின் பெயரால் மக்களிடையே பிரிவினையை தூண்டும் அரசியலை, அக்கட்சி முன்னெடுத்து வருகிறது. இந்தியா பிளவுபட வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. அந்த நோக்கத்திலேயே பாஜகவும் செயல்படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தான் செய்ய முடியாததை, மோடியும் அமித் ஷாவும் கடந்த 5 ஆண்டுகளில் செய்துவிட்டனர். நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் ஆபத்தான பாஜக ஆட்சியை, என்ன விலை கொடுத்தேனும் அகற்ற வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவர்': மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், அரசமைப்புச் சட்டத்தையே மாற்றி விடுவர். மேற்கொண்டு எந்த தேர்தலும் நடைபெறாத முடியாதபடி செய்துவிடுவர். ஜெர்மனியில் ஹிட்லரைப் போல் சர்வாதிகார ஆட்சி நமது நாட்டிலும் ஏற்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பாஜக அரசு தோல்விகண்டுவிட்டது. விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏராளமான வேலைவாய்ப்புகளை பறித்துச் சென்றுவிட்டது. அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலாக, எதிர்வரும் மக்களவைத் தேர்தலை கருதக் கூடாது. மோடி மற்றும் பாஜகவை, ஆட்சியிலிருந்து அகற்றும் தேர்தலாக பார்க்க வேண்டும்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபட்டுவிடும். எனவே, அக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மோடி மீது தாக்கு: பெண்கள், தலித் சமூகத்தினர் குறித்து அவதூறாக கருத்துகளை கூறிய நபர்களை, சுட்டுரையில் பிரதமர் மோடி பின்தொடர்ந்து வருகிறார். இதேபோல், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோரையும் அவர் பின்தொடர்கிறார். இது வெட்கக் கேடானது என்றார் கேஜரிவால்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com