கேரளத்தில் பந்த்: தமிழக அரசுப் பேருந்துகள் களியக்காவிளை வரை இயக்கம்

சபரிமலை விவகாரம் தொடர்பாக பாஜக சார்பில் கேரளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்திலிருந்து


சபரிமலை விவகாரம் தொடர்பாக பாஜக சார்பில் கேரளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை சென்று திரும்பின.
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாகவும், ஐயப்ப பக்தர்களிடம் கேரள அரசு கெடுபிடியாக நடந்து கொள்வதை கண்டித்தும் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் பாஜக மாநிலத் தலைவர் சி.கே. பத்மநாபன் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை போராட்ட திடலில் ஒருவர் சரண கோஷம் எழுப்பியவாறு ஓடி வந்து தனது உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, கேரளத்தில் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அம் மாநில பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கேரளத்தில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டம் காரணமாக கேரளத்தில் அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள் இயங்கவில்லை. பாறசாலை உள்பட கேரளத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை வந்து திரும்பிச் சென்றன. பாறசாலை வழி பனச்சமூடு செல்லும் நகரப் பேருந்துகள் மேக்கோடு, மலையடி, மூவோட்டுக்கோணம் வழியாகவும், கொல்லங்கோடு செல்லும் பேருந்துகள் கோழிவிளை வழியாகவும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. பந்த் காரணமாக களியக்காவிளையிலிருந்து கேரளத்துக்கு செல்ல வாகன வசதியின்றி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com