மக்கள்மார் சந்திப்பில் பங்கேற்க வேளிமலை குமாரசுவாமி சுசீந்திரம் புறப்பாடு

சுசீந்திரம் மார்கழி பெருந்திருவிழா நடைபெறும் மக்கள்மார் சந்திப்பில் பங்கேற்க குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி புறப்பாடு நிகழ்ச்சி


சுசீந்திரம் மார்கழி பெருந்திருவிழா நடைபெறும் மக்கள்மார் சந்திப்பில் பங்கேற்க குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி புறப்பாடு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி பெருந்திருவிழா டிச- 14 ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 3-ஆம் திருநாளான ஞாயிற்றுகிழமை இரவு 10.30 மணிக்கு மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தாய், தந்தையரான சுவாமியையும் அம்பாளையும் காண, கோட்டாறு அருள்மிகு வலம்புரி விநாயகர், மருங்கூர் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி, வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி ஆகியோர் பங்கேற்று தாய், தந்தையரை மூன்று முறை வலம் வந்து ஆசி பெறுவர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி புறப்பாடு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, குமாரகோவிலில் இருந்து சுவாமி புறப்படுவதற்கு முன்பாக குதிரை வாகனம் எடுத்துச் செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அருள்மிகு குமாரசுவாமி புறப்பட்டார். அப்போது, வழி நெடுகிலும் வீடுகளின் முன்பு விளக்கேற்றி வெற்றிலை பழம் தேங்காய் வைத்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து தோட்டியோடு அருகேயுள்ள பெருமாள் மடத்தில் குமாரசுவாமிக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சுவாமி பல்லக்கில் பார்வதிபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு சென்றார். நிகழ்ச்சியில் தேவஸம்போர்டு கோயில் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், குமரிமாவட்ட வள்ளலார் பேரவைத்தலைவர் பத்மேந்திரசுவாமி, குமரி வரலாற்று பண்பாட்டு மைய ஆய்வாளர் டாக்டர் பத்மநாபன், குமாரகோவில் கோயில் மேலாளர் மோகனகுமார், இரணியல் ஆய்வாளர் சுதேசன், இந்து சமய அறநிலயத்துறை தோட்டியோடு பெருமாள் மடம் மற்றும் பிள்ளையார் கோயில் செயல் அலுவலர் பொன்னி, ஆய்வாளர்கள் ஜலஜாகுமாரி, கோமதி, சாரதா, கணக்கர் பிரேம்குமார் உள்பட
திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com