4 தலைமுறைக்கானது மார்த்தாண்டம் மேம்பாலம்: பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் ரூ. 220 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம்

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் ரூ. 220 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அடுத்துவரும் 4 தலைமுறைக்கு மேல் மக்கள் பயன்படும் விதத்தில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்படுகிறது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
மார்த்தாண்டம் மேம்பாலத்தை புதன்கிழமை மாலையில் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மார்த்தாண்டம் மேம்பாலம் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் கடந்த 10ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.  
அப்போது 9ஆம் எண் தூணின் மேற்பகுதி அதிர்வதாக ஒருசிலர் திட்டமிட்டு முகநூல், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புகின்றனர். 9ஆம் எண் தூண் 43 அடி உயரம் கொண்டது. பாலத்தின் தூண் அமைப்பானது உயரம் அதிகரிக்க அதிகரிக்க பேலன்ஸ் (தாங்கும் திறன்) அதன் தன்மைக்கேற்றப பேயரிங் அமைக்கப்பட்டு நவீன தொழில்நுட்பத்தில் ஐஐடி வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மேலும் அச்சமடையாமலிருக்க இந்த 9ஆம் எண் தூண் பகுதியில் மேற்கொள்ளப்படும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.  ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டு, அதன் உறுதித்தன்மையை மக்களுக்கு விளக்கிய பின்னர்தான் அந்தத் தூணில் மற்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மக்களின் திருப்திக்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.  
இப்பாலம் இனிவரும் 4 தலைமுறைக்கு மேல் மக்கள் பயன்படுத்தும் விதத்தில் அமைக்கப்படுகிறது என்றார் அவர்.
அவருடன் மேம்பால தொழில்நுட்பப் பொறியாளர்கள், பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.
"வதந்திகளை நம்ப வேண்டாம்': மார்த்தாண்டம் மேம்பாலம் குறித்த வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்றார் தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்  டி.தனசேகர்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மார்த்தாண்டத்தில் நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் உயர்நிலைப் பாலம்தான், தென்னிந்தியாவிலேயே அதிக நீளமான இரும்புப் பாலம்.  வரும் டிசம்பருக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
இப்பாலம், பல்வேறு இயக்கத்துக்கேற்ப இந்திய சாலைக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட, நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி தொடங்கிய நாள் முதல் தொடர் ஆய்வு செய்யப்பட்டு,  பாலத்தின் உறுதித்தன்மை, தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம்; அச்சமும் தேவையில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com