குறுமத்தூர் கூட்டுறவு கடன் சங்கம் முன் அனைத்துக் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

களியக்காவிளை அருகேயுள்ள குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் இ-சேவை மையம்

களியக்காவிளை அருகேயுள்ள குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் இ-சேவை மையம் பணி முடக்கப்பட்டதை கண்டித்து, அனைத்துக் கட்சி சார்பில், கூட்டுறவு சங்க அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
குறுமத்தூர் கூட்டுறவு சங்கத்தில் செயல்பட்டு வரும் பொது சேவை மையத்தில் கணினி இயக்குபவராக செயல்பட்டு வரும் பெண் பணியாளருக்கு கடந்த அக். 22ஆம் தேதி முதல் கூட்டுறவு சங்கத் தலைவரால் பணி மறுக்கப்பட்டதையடுத்து, இங்குள்ள பொது சேவை மையம் செயல்படாமல் முடங்கியது.
இதனால் பல்வேறு சான்றிதழ்களுக்காக விண்ணப்பிக்க முடியாமலும், ஏற்கெனவே விண்ணப்பித்த சான்றிதழ்களை பெற முடியாமலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 
இந்நிலையில் பொது சேவை மைய பணியாளருக்கு தொடர்ந்து பணி வழங்கக் கோரியும், முடங்கிக் கிடக்கும் பொது சேவை மையத்தை செயல்பட செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கூட்டுறவு சங்க அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்த்தாண்டம் வட்டாரச் செயலர் வீ. அனந்தசேகர் தலைமையில், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் தங்கமணி,  மார்த்தாண்டம் வட்டாரக் குழு உறுப்பினர் ஏ. வின்சென்ட்,  ஈ. பத்மநாபபிள்ளை, கட்சி நிர்வாகிகள் ராஜகுமார், டி. வின்சென்ட், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் என். விஜயேந்திரன், அதிமுக நிர்வாகி ராஜா டைட்டஸ், திமுக நிர்வாகி சுதீர், பாஜக நிர்வாகிகள் கோபகுமார், குணசீலன், மதிமுக நிர்வாகிகள் ஆன்றணி, ஷாஜிகுமார், களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சதீஷ் சந்திர பிரசாத், தேவராஜ், குழித்துறை நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் மோசஸ் சுதீர் உள்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் பணியில் இருந்த பணியாளர்களை வெளியேற்றிவிட்டு, அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து களியக்காவிளை போலீஸார் வந்து போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து கூட்டுறவுத்துறை கள அலுவலர் கிரிஜா வந்து பேச்சு நடத்தினார். இப்பிரச்னை குறித்து சங்கத் தலைவருடன் பேச்சு நடத்தி சுமுக முடிவு எட்டப்படும் என்றார். இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கூறி அனைவரும் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com