மதம், ஜாதியின் பெயரால் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி: கனிமொழி குற்றச்சாட்டு

மதம் மற்றும் ஜாதியின் பெயரால் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுங்கட்சிகள் செய்து வருகின்றன என்றார்

மதம் மற்றும் ஜாதியின் பெயரால் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுங்கட்சிகள் செய்து வருகின்றன என்றார் திமுக மகளிர் அணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான  கனிமொழி.
நாகர்கோவிலில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த  பெண்கள் திமுகவில் சேறும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கனிமொழி பேசியது:
ஒக்கி புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. மத்தியில் ஆளும் பாஜக, குமரி மாவட்டத்துக்கு எதுவுமே செய்யவில்லை.
பொதுமக்களுக்காக எதையும் செய்யாத மத்திய, மாநில அரசுகள் தற்போது மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு அரசியல் லாபம் தேடப் பார்க்கின்றன.  அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.
திமுக ஆட்சியில்தான் பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. பெண்கள் சுயமாக உழைத்து முன்னேற வேண்டும் என்பதற்காக, கருணாநிதி முதல்வராக இருந்தபோது சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. அவற்றுக்கு போதுமான சுழல் நிதியை பெற்றுத் தந்தவர் மு.க.ஸ்டாலின். பெண்களுக்கு சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டதும் திமுக ஆட்சியில்தான்.  எனவே பெண்கள் திமுகவுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, மேற்கு மாவட்டச் செயலாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ, ஆஸ்டின் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், நாகர்கோவில் நகர திமுக செயலாளர் மகேஷ், ஒன்றியச் செயலாளர்கள் தாமரைபாரதி, மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com