கன்னியாகுமரி

உணவு தானிய கிடங்குகளில் இயற்கை முறையில் பூச்சி கட்டுப்பாடு: இந்திய உணவுக் கழக மாநிலத் தலைவர்

DIN

தமிழகத்தில் உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளில் இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறை செயல்படுத்தப்பட்டு வருவதாக இந்திய உணவுக் கழகத்தின் மாநிலத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.
இந்திய உணவுக் கழகத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு,  மாநிலத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. தலைமை வகித்தார். இந்திய உணவுக் கழகத்தின் தமிழ்நாடு பொதுமேலாளர் சைஜு, துணைப் பொதுமேலாளர்கள் சுப்பிரமணியன், முகேஷ்வரப்பா, ராம்கோட்டி, முகமது ஜகுருதீன், நாகர்கோவில் நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி பொதுமேலாளர் ஆனந்த், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு மண்டல மேலாளர் அலாவுதீன் மற்றும் 40-க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் திருச்சி சிவா கூறியது: இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் அரிசி, கோதுமை போன்ற தானியங்களைக் கொள்முதல் செய்து, அந்தந்த மாநிலங்களில் தேவைக்கேற்ப வழங்குவதுதான் இந்திய உணவுக் கழகத்தின் அடிப்படைப் பணியாகும்.
தமிழ்நாட்டில் ஓராண்டின் மொத்த அரிசியின் தேவை 35 லட்சம் டன். ஆனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தேவையான அரிசியை கொள்முதல் செய்ய இயலாத நிலையில், மத்திய அரசின் இந்திய உணவுக் கழகம் மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமையை தந்து இங்குள்ள மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது.
தமிழ்நாட்டில் 400 கொள்முதல் நிலையங்களே உள்ளன. அவற்றின் குறியீடு 20 லட்சம் டன். ஆனால், வாங்கியிருப்பது 1.62 லட்சம் டன்.  அப்படி என்றால் இன்னும் 3 மாதத்தில் எப்படி 18 லட்சம் டன் வாங்க முடியும்? ஆகவே, வேறு வழியில்லாமல் விவசாயிகள் வெளிச்சந்தையில் விற்கிறார்கள்.
விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல் போன்ற தானியங்களை கொள்முதல் செய்ய போதுமான கொள்முதல் நிலையங்கள் இல்லை; சரியான விலை இல்லாதபோது மத்திய அரசே நேரடியாக ஏன் வாங்கக் கூடாது என்று சில குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார்கள். 
பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்திய உணவுக் கழகம் நேரடியாக கொள்முதல் செய்கிறது. அதேபோல் இங்கும் செய்யமுடியுமா என்பது யோசித்து முடிவெடுக்கக்கூடிய விஷயமாகும்.
இதற்கிடையே, கிடங்கில் சேமித்து வைத்துள்ள தானியங்களை பூச்சிகள் சேதப்படுத்தாமல் இருக்க ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தி வந்தோம்.  
இதனால் தானியங்கள் மேலும் கெடும் என்பதால் இந்தியாவின் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கிடங்குகளில் வசம்பு போன்ற இயற்கை மருந்தை தண்ணீரில் கரைத்து தெளித்தும், வேப்பிலை, நொச்சியிலை போன்றவற்றை மூட்டையின் இடையில் பரப்பி வைத்தும் பூச்சியைக் கட்டுப்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் இந்த முறை வெற்றி பெறுமேயானால் இந்தியா முழுவதும் செயல்படுத்தலாம் என்ற யோசனையை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிடம் கூறியபோது அதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அவர்கள் உற்பத்தி செய்கின்ற தானியங்களை கொள்முதல் செய்யவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும்,  இந்திய உணவுக் கழகமும் இணைந்து எப்படி செயல்படலாம் என்பது குறித்தும் இந்தக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றார் அவர்.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT