வனத் துறை நடவடிக்கையை கண்டித்து பழங்குடியின மக்கள் மறியல் போராட்டம்

வனத்துறை  நடவடிக்கையை கண்டித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத் துறை அலுவலகம் முன்,  தமிழக 

வனத்துறை  நடவடிக்கையை கண்டித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத் துறை அலுவலகம் முன்,  தமிழக ஆதிவாசிகள் மகா சபை சார்பில் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காணி இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் மலைப் பகுதிகளில் குடியிருக்கவும், தேவையான விவசாயம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.
கடந்த 10 ஆண்டுகள் வரை இந்த வன உரிமைகளை பெற்றுவந்த இம் மக்களுக்கு, தற்போது உரிமைகள் வனத்துறை சார்பில் மறுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி மலைகளில் குடிசைகளாக இருக்கும் குடியிருப்புகளை மாற்றம் செய்வதற்கு கல், மணல், ஜல்லி போன்ற வீடுகட்டும் கட்டுமான பொருள்களுக்கு நகர பகுதிகளில் இருந்து மலைப் பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் வனத்துறை தடை விதித்துள்ளது.
மேலும் வன குடியிருப்பு பகுதிகளில் உள்ள கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடத்தாமல் இருப்பதை கண்டித்தும், நிலம் மற்றும் சமூக உரிமைகளில் விதிகளுக்கு மாறாக நிபந்தனைகளை உருவாக்கியதாக மாவட்ட வன அதிகாரியை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
ஆதிவாசி மகா சபை மாநிலத் தலைவர் ராஜன் தலைமை வகித்தார். இதில், எம்எல்ஏக்கள் மனோ தங்கராஜ், ஆஸ்டின், சுரேஷ்ராஜன் மற்றும் 400-க்கும் மேற்பட்ட காணி இன மக்கள் கலந்துகொண்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் வடசேரி அண்ணாசிலை சந்திப்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
காவல் துறையினர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டக் குழுவினர் சாலை மறியல் போராட்டத்தை மாவட்ட வன அலுவலக முற்றுகை போராட்டமாக மாற்றினர்.
பின்னர் அதிகாரிகள், போராட்டக்குழுவினர் மற்றும் எம்எல்ஏக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், வரும் அக். 5ஆம் தேதி பழங்குடி மக்கள் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com