7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: பொன். ராதாகிருஷ்ணன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் பால்மா மக்கள்அமைப்புகளின் அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியது:
அற்புதம்மாள் ஒரு தாய் என்ற உணர்வோடு ஆளுநரை சந்தித்துள்ளார். தாய் தன் மகன் மீதான பாசத்தை அளவிட முடியாது. அதே நேரத்தில் சட்டத்தின் நிலையைப் பார்க்க வேண்டும். நாளை நமது நாடு எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில்கொண்டும், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை கருத்தில்கொண்டும் தமிழக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் அம்மாவட்டத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள சிலர் கூறினர். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் என்றால், அது அங்குள்ள மக்களுக்கும், அம் மாவட்டத்துக்கும் நல்லதல்ல. இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு பொருளாதார ரீதியிலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலோ இல்லாமல் இருப்பதை மனதில் வைத்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. அந்த நேரத்தில் கூட்டணி குறித்து பாஜக முடிவு செய்யும். தமிழகத்தில் பல ஆண்டுகளாக கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. திமுக 1962ஆம் ஆண்டுமுதல் கூட்டணி அமைத்துதான் ஆட்சி செய்தது. 5 முறை ஆட்சியில் இருந்தும் அந்தக் கட்சிக்கு கூட்டணி தேவைப்படுகிறது. அதிமுகவும் சிறிய கட்சி  அல்லது பெரிய கட்சியோடு கூட்டணி அமைத்துதான் போட்டியிடுகிறது. இன்னொரு கட்சியின் துணை இல்லாமல் இரு கட்சிகளும் போட்டியிடுவதில்லை என்றார் அவர்.
பாஜக மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், கோட்ட பொறுப்பாளர் சி. தர்மராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர். ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து உண்ணாமலைக்கடை பேரூராட்சி நாகம்பிறவிளையில் அமைக்கப்பட்ட குடிநீர்த் தொட்டி, நல்லூர் பேரூராட்சி இலவுவிளையில் அமைக்கப்பட்ட கலையரங்கம், கருங்கல் பேரூராட்சி பாலவிளை, தொழிச்சல், காட்டுக்கடை பகுதி மற்றும் பாலப்பள்ளம் பேரூராட்சி தெற்குபிடாகை உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்ட கலையரங்கம் ஆகியவற்றை மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com