குலசேகரத்தில் பாஜக மறியல்: 262 பேர் கைது

குமரி மாவட்ட வனப் பகுதிகளை களக்காடு, முண்டன்துறை புலிகள் சரணாலயப் பகுதிகளுடன் இணைக்க

குமரி மாவட்ட வனப் பகுதிகளை களக்காடு, முண்டன்துறை புலிகள் சரணாலயப் பகுதிகளுடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து, குலசேகரத்தில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 262 பேரை போலீஸார் கைது செய்தனர். 
குலசேகரம் அரசமூடு சந்திப்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, பாஜக மாவட்டத் தலைவர் எஸ். முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலர்கள் தங்கப்பன், சஜூ, மாவட்டச் செயலர் ஜெயராம், எஸ்.டி. அணி மாவட்டத் தலைவர் புஷ்பாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி சிறப்புரையாற்றினார்.
இதில், கோட்டப் பொறுப்பாளர் சி. தர்மராஜ்,  மாநில செயற்குழு உறுப்பினர் ஷீபாபிரசாத், மாவட்ட துணைத் தலைவர் ப. ரமேஷ், குலசேகரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராதா தங்கராஜ், புதுக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் மோகனகுமார், குலசேகரம் மண்டலத் தலைவர் ஆனந்த்,  பாஜக எஸ்.டி. அணி நிர்வாகிகள் ராமசந்திரன்காணி,  ரவிக்குமார் காணி,  கிருஷ்ணன்காணி,    திருவட்டாறு ஒன்றிய பார்வையாளர் வினோத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
குமரி மாவட்ட வனப்பகுதிகளை களக்காடு முண்டன்துறை புலிகள் சராணாலயப் பகுதிகளுடன் இணைக்கக் கூடாது; காணி மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்; வனப்பகுதிகளில் வெளி மாவட்டப்  பகுதிகளிலிருந்து கொண்டு விடப்பட்டுள்ள புலி, சிறுத்தை உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும்,  வன உரிமைச் சட்டத்தை அமல் படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  
சாலைமறியலால் மார்த்தாண்டம் - குலசேகரம் சாலை, பொன்மனை - குலசேகரம் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதையடுத்து கோட்ட துணை வட்டாட்சியர் கந்தசாமி,  தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயன், குலசேகரம் காவல் ஆய்வாளர் செல்வதங்கம் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 
கோரிக்கைகள் தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு ஏற்படுத்தப்படும் என்றனர். இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வனத்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து கோரிக்கைக்கு தீர்வு தொடர்பான உறுதிமொழி அளிக்க வேண்டுமென்றனர்.
பின்னர் உதவி வனப் பாதுகாவலர் நவாஸ்கான் வந்து பேச்சு நடத்தினார். கோரிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி ஒரு மாதத்துக்குள்  தீர்வு ஏற்படுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.  
262 பேர் கைது: இதற்கிடையே மறியலில் ஈடுபட்டதாக 89 பெண்கள் உள்ளிட்ட 262 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com