கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்களை உடனே பட்டியலில் சேர்க்க எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்களை உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் வலியுறுத்தினார். 


கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்களை உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் வலியுறுத்தினார். 
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.  கன்னியாகுமரி தொகுதி வாக்காளர்கள் புதிய மக்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் ஆர்வத்தில் அன்று காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். ஆனால், மீனவ கிராமங்களான தூத்தூர், கடியபட்டணம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர் நீக்கப்பட்டதால், தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாமல் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 
இதுகுறித்த ஆய்வில், 42 மீனவர் கிராமங்களிலும் இதேபோல வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது அவர்களின் ஜனநாயக  உரிமையை பறிப்பதாகும். நூறு சதவீதம் வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்த்த  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 69.61 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. மக்கள்தொகை உயர்வுபடி, ஆண்டுதோறும் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக இந்தப் பணியில் இருந்த அலுவலர்கள் குளறுபடி செய்துள்ளதாக தெரியவருகிறது. அலுவலர்களின் அலட்சியத்தால் மீனவர்கள்,  சிறுபான்மையினரின் வாக்குகள் பறிபோயுள்ளன. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவைக்கு மீண்டும் தேர்தல் வரலாம். உள்ளாட்சித் தேர்தலும் நடைபெற உள்ளது. எனவே, நீக்கப்பட்ட வாக்காளர்களை உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், வாக்குரிமை இழந்த வாக்காளர்களை திரட்டி போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com