தீயினால் வன வளம் அழியாமல் பாதுகாக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் வனங்களில் ஏற்படும் தீயை தடுக்க வனத் துறையினர் தீவிரம் காட்ட வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் வனங்களில் ஏற்படும் தீயை தடுக்க வனத் துறையினர் தீவிரம் காட்ட வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மொத்த பரப்பில் 33 சதவீதம் வரை காடுகள் என்ற நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கடும் வெயில் நிலவும் வசந்த காலம் மற்றும் கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்தும் தீயின் பாதிப்பிலிருந்தும் வனங்களையும், வனங்களை ஒட்டிய வருவாய் புறம்போக்கு காடுகளையும் பாதுகாப்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.
வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே வனப்பகுதிகளின் எல்லைகளில் தீத் தடுப்பு கோடுகள் வெட்டப்பட்டாலும் அப்பணிகள் முழுமையாக நடைபெறுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தீத் தடுப்பு காவலர்களும் போதிய அளவுக்கு இல்லாத நிலை உள்ளது. வனப்பகுதிகளை ஒட்டிய தனியார் நிலங்களிலிருந்து பல வேளைகளில் தீ காட்டுக்குள்  பரவும் நிலையும் ஏற்படுகிறது.
குமரி மாவட்டத்தில் காடுகளில் ஆங்காங்கே தீ பிடித்து வனங்கள் அழிந்து வருகின்றன. ரப்பர் கழக பகுதிகளிலும் அதே நிலை உள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இறச்சகுளம்  வருவாய் புறம்போக்கு நிலங்களில் தீ ஏற்பட்டு அங்கு நடப்பட்டிருந்த ஏராளமான மரங்கள் கருகின.
ஒவ்வொரு ஆண்டும் காடுகளில் ஏற்படும் தீயினால் பெருமளவில் மரங்களும், மூலிகைகளும், செடி, கொடிகளும் கருகி நாசமாகின்றன. மேலும் வன விலங்குகள் உயிருக்கு அஞ்சி ஓடுகின்றன. இதனால் காடுகளில் வாழும் பழங்குடி மக்களும் அச்சப்பட்டு வாழும் நிலை ஏற்படுகிறது.
எனவே குமரிக் காடுகளில் ஏற்படும் தீயைத் தடுக்கும் வகையிலும், தீயை விரைந்து அணைக்கும் வகையிலும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த உபகரணங்களை வனத் துறையினர் பயன்படுத்த வேண்டும் என இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து விஞ்ஞானியும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவருமான ஆர்.எஸ். லால் மோகன் கூறியது: உலக அளவில் காடுகளின் பரப்பளவு சுருங்கி வருகிறது. காடுகளில் தீ ஏற்படும் போது வளிமண்டலம் அதிகளவில் மாசு படுகிறது. காடுகளில் வாழும் பறவையினங்களும், விலங்கினங்களும் ஆபத்தை சந்திக்கின்றன. மரங்களும், செடிகளும் அழிந்து போகின்றன. மிகக்குறைந்த அளவில்தான் இயற்கையாகவே காடுகளில் தீ சம்பவங்கள் ஏற்படுகின்றன. மற்றபடி மனிதர்களாலே அதிகளவு தீ சம்பவங்கள் நடைபெறுகின்றன. 
காடுகளில் ஏற்படும் தீயைக்  கண்டுபிடிக்க செயற்கைக் கோள் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற முறைகளையும் நமது நாட்டில் பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com