ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா: பல லட்சம் பெண்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில்

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டு வழிபட்டனர்.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற  ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில், ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு பெண்களும் திறந்த வெளியில் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவர்.
 நிகழாண்டு பொங்கல் விழா, கடந்த 12 ஆம் தேதி இரவு அம்மனுக்கு காப்பு கட்டி குடியிருத்தலுடன் தொடங்கியது. விழாவின் 9 ஆம் நாளான புதன்கிழமை பெண்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 10.20 மணியளவில் கோயில் தந்திரி தெக்கேடத்து குழிக்காட்டு பரமேஸ்வரன் வாசுதேவன் பட்டத்திரிபாடு கோயிலில் இருந்து ஏற்றிய தீபத்தை, மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரியிடம் கொடுக்க அவர் கோயிலின் முன் அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் தீமூட்டினார்.
இதைத் தொடர்ந்து, கோயில் மணி ஒலிக்கப்பட்டு, ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டதும் கோயிலைச் சுற்றிலும் சுமார் 10 கி.மீ. தொலைவு வரை தாங்கள் அமைத்த பொங்காலை அடுப்புகளில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டனர். தொடர்ந்து பிற்பகல் 2.30 மணியளவில் பொங்கல் நிவேத்யம் நடைபெற்றது.
 இவ்விழாவையொட்டி திருவனந்தபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்ததுடன், அந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டிருந்தது. விழாவில், கேரளம் மட்டுமன்றி கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  பல லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர். இத்திருவிழா வியாழக்கிழமை இரவு குருதிபூஜையுடன் நிறைவடைகிறது.
1997 ஆம் ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com