திருநெல்வேலி

சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமானப் பணி: 3 மாதம் அவகாசம் வழங்க கோரிக்கை

DIN

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் நவீன பேருந்து நிலையமாக மாற்றும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள கடைகளை காலி செய்ய 3 மாதகாலம் அவகாசம் வழங்க வேண்டும் என வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக எஸ்.டி.பி. ஐ. கட்சியின் வர்த்தகர் அணி மாவட்டத் தலைவர் கே.எஸ்.சாகுல் ஹமீது உஸ்மானி மற்றும் நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய தென்பகுதி வியாபாரிகள் சங்கப் பொருளாளர் சேட் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் அளித்த மனு: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் சுமார் ரூ. 78 கோடி செலவில் நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்கிடையே கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகை தினங்கள் வருவதால், வியாபாரிகளின் சூழலை கருத்தில் கொண்டு, கடைகளை காலி செய்ய வரும் மார்ச் மாதம் இறுதிவரை கால அவகாசம் வழங்க வேண்டும். 
12ஆம் தேதி மாலை 4 மணிக்குள் காலி செய்யாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்க நேரிடும் என்றும், பொக்லைன் இயந்திரம் மூலம் கடைகள் அகற்றப்படும் என்றும் வாய் மொழியாக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். எனவே முறையாக அறிவிப்பு செய்து, போதிய கால அவகாசம் தரவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நிகழ்வில் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி மாவட்டச் செயலர் மோத்தி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் பர்கிட் அலாவுதீன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலர் கே. ஹயாத் முகம்மது, வியாபார சங்கப் பிரதிநிதிகள் அபுல் ஹுதா,  சுப்ரமணியன், ராஜ்குமார், செந்தூர் பாண்டியன், முஹம்மது யூசுப், ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT