பாரதியார் பிறந்த தினம்: சிலைக்கு மாலை அணிவிப்பு

மகாகவி பாரதியாரின் 137ஆவது பிறந்த நாள் விழா திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில்

மகாகவி பாரதியாரின் 137ஆவது பிறந்த நாள் விழா திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினரும், பொதுஅமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் பயின்ற வகுப்பறை நாற்றங்கால் என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு பாரதியாரின் நினைவுகளை எடுத்துச் சொல்லும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. 
இந்த வகுப்பறையில் நடைபெற்ற விழாவில், பாரதியாரின் உருவப் படத்துக்கு மாணவர்-மாணவிகள் மாலை அணிவித்து, ஒருமைப்பாட்டு உறுமொழி ஏற்றனர். எழுத்தாளர் நாறும்பூநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியார் சிலைக்கு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்கேஎம்.சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாஜக சார்பில் கிழக்கு மாவட்டத் தலைவர் அ.தயாசங்கர் தலைமையிலும்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையிலும், ராகுல்காந்தி பேரவை சார்பில்,  காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ்.வேணுகோபால் தலைமையிலும் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநில பொதுச் செயலர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
உலகப் பொதுச் சேவை நிதியம் சார்பில் இயக்கத் தலைவர் அ.மரியசூசை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  பொதுச்செயலர் கவிஞர் கோ.கணபதிசுப்பிரமணியன், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, கவிஞர் ஜெயபாலன், நூலகர் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ஏ.சிவகுமார் தலைமையில் பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
மாவட்டச் செயலர் சுப்பிரமணி, பொருளாளர் என்.ஐயப்பன், அமைப்புச்செயலர் கே.சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com