கஜா புயல்: தயார் நிலையில் பேரிடர் மேலாண்மைக் குழு: நிர்வாக ஆணையர்

கஜா புயலால் வரும் 15ஆம் தேதி வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பேரிடர் மேலாண்மைக் குழு

கஜா புயலால் வரும் 15ஆம் தேதி வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பேரிடர் மேலாண்மைக் குழு தயாராக வைக்கப்பட்டுள்ளது என பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்தியகோபால் தெரிவித்தார். 
தமிழக பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை கொசு ஒழிப்புப் பணியை ஆய்வு செய்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தாக்கம் அதிகம் உள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழக முதல்வர் பலகட்டமாக ஆய்வு நடத்தி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டைவிட நிகழாண்டு டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது.
தமிழகத்தில் அரசு கட்டடங்கள், அலுவலகங்களில் ஆய்வு செய்து, மழை நீர் தேங்கி உள்ளதா என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தினமும் களஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னேற்பாடுகள் தயார்: வங்கக் கடலில் புதிய கஜா புயல் சின்னம் உருவாகியுள்ளது. இந்தப் புயல் கடலூர், ஸ்ரீஹரிகோட்டா இடையே இம்மாதம் 15 ஆம் தேதி கரையை கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.  இதனால், வடதமிழகம், தெற்கு ஆந்திரத்தில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கடலோரப் பகுதியில் கனமழை பெய்யும் என்பதால் அனைத்து கடலோரக் கிராமங்கள் மற்றும் சென்னையிலும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக பேரிடர் மேலாண்மைக் குழு, மருத்துவக் குழுக்கள் தயாராக உள்ளன. தேவை ஏற்பட்டால் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைக் குழுவின் உதவி கோரப் படும். தமிழகத்தில் 4399 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. அப்பகுதியில் வட்டாட்சியர் தலைமையிலான குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர அனைத்து மாவட்டத்திலும் மருத்துவக் குழு, பேரிடர் குழுக்கள் உள்ளன.
பேரிடர் காலத் தகவல் தொடர்புகளை அதிவிரைவில் அறிந்துகொள்ளும் வகையில் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவ்வப்போது கிடைக்கும் தகவலின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் காலத்தில் தன்னார்வ தொண்டர்களை ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த 1500 தன்னார்வ தொண்டர்களை பேரிடர் பணியில் ஈடுபடுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடலுக்குச் சென்றிருக்கும் மீனவர்கள் 13 ஆம் தேதி மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக கடலில் தங்கி மீன்பிடித்து வருவோர், அருகில் இருக்கும் துறைமுகத்திற்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com