கொசுப்புழு உற்பத்தி:  அரசு மருத்துவமனை, பள்ளிக்கு அபராதம்

திருநெல்வேலி அரசு மருத்துவமனை, தனியார் பள்ளி வளாகத்தில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனை, தனியார் பள்ளி வளாகத்தில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை கொசு ஒழிப்புப் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 
பேரிடர் மேலாண்மை ஆணையர் மருத்துவமனையில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டுகள், மருத்துவமனை வளாகத்தில் அமைந்திருக்கும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றைப் பார்வையிட்டார். அங்குள்ள தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி அமைந்துள்ள பகுதியில் மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகியிருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர், மருத்துவமனைக்கு எதிரிலுள்ள காந்திமதி அம்பாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவிகளைச் சந்தித்து, கொசுப் புழுக்களால் ஏற்படும் பாதிப்பு, நோய் எவ்வாறு பரவுகிறது, கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை, கை கழுவும் பழக்கம், காய்ச்சல் பாதிக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆலோசனை தெரிவித்தார். ஆய்வின்போது, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆனது கண்டறியப்பட்டது.
பின்னர், ஆட்சியர் கூறியது: திருநெல்வேலி அரசு மருத்துவமனை, காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், ஒருசில இடங்களில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அரசு மருத்துவ மனைக்கு ரூ. 2 ஆயிரம், பள்ளிக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் நோய் வராமல் தடுக்க முடியும் என்றார் அவர்.
ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சா. செந்தில்குமார், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.எம். கண்ணன், மாநகர நகர்நல அலுவலர் சதீஸ்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் ஐயப்பன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com