"தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கோரி நெல்லையில் நவ.30 இல் உண்ணாவிரதம்' 

தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிடக் கோரி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருநெல்வேலியில்

தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிடக் கோரி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருநெல்வேலியில் இம் மாதம் 30 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார் அக் கட்சியின் மாநில தலைவர் பெ.ஜான்பாண்டியன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது: எங்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் தேவந்திரகுல வேளாளர் சாதியை பட்டியல் சாதியை விட்டு வெளியேற்றி வேளாண் மரபினர் என்ற தனிப்பிரிவில் சேர்த்து மக்கள் தொகை அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணை வெளியிட வேண்டும். தியாகி இமானுவேல் சேகரனுக்கு அரசு விழா நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தும் முறையிட்டுள்ளோம். பரிசீலிப்பதாக தெரிவித்துள்ள அரசு, இதுவரை உறுதியான முடிவை அறிவிக்கவில்லை. ஆகவே, இக் கோரிக்கைகளை வலியுறுத்தி எனது பிறந்த நாளான இம் மாதம் 30 ஆம் தேதி பாளையங்கோட்டை நேருஜி திடல் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பதை தேர்தல் தேதி அறிவித்த பின்பு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து தெரிவிப்போம்.
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறை சரியாக செயல்படாத நிலையையே இது காட்டுகிறது. ஏழை-எளிய மக்கள் சில நேரங்களில் சிகிச்சை பெற முடியாமல் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள். மருத்துவர்கள் எவ்வித பாகுபாடுகளையும் காட்டாமல் சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்கார் படப் பிரச்னை விளம்பரப்படுத்துவதற்காக கிளப்புவதாகவே கருதுகிறோம். தமிழர்களுக்கு பாதிப்போ, பிரிவினையோ உருவாகாத வகையில் திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து என்றார் அவர்.
செயற்குழுக் கூட்டம்: முன்னதாக நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலர் வழக்குரைஞர் பிரிசில்லா பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பெ.ஜான்பாண்டியன் சிறப்புரையாற்றினார். மாநில செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர், தென்மண்டல செயலர் அழகர்சாமி, நிர்வாகிகள் அய்யாதுரை பாண்டியன், இம்மானுசேகர் உள்பட பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். திருநெல்வேலி மாநகர் மாவட்டத் தலைவர் கண்மணிமாவீரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com