நான்குனேரியன் கால்வாயில் பாலம் சேதமடையும் அபாயம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பிரதான சாலையோரமுள்ள கால்வாயில் 6 மாதங்களுக்கு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பிரதான சாலையோரமுள்ள கால்வாயில் 6 மாதங்களுக்கு முன்னர் சூறைக்காற்றில் விழுந்த மரத்தின் கிளைகளை நெடுஞ்சாலைத் துறையினர் வெட்டி அகற்ற முன்வராமல் அலட்சியம் காட்டுவதால் நீரோட்டம் தடைபட்டு பாலம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
களக்காடு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் களக்காட்டிலிருந்து நான்குனேரி செல்லும் சாலையில் படலையார்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரமுள்ள பழைமை வாய்ந்த மருதமரம் முறிந்து, அதன் கிளைகள் முழுவதும் நான்குனேரியன் கால்வாய்க்குள் விழுந்தது. பெரிய மரம் என்பதால் கால்வாயின் பெரும் பகுதியை மரக்கிளைகள் ஆக்கிரமித்து நீரோட்டம் தடைபட்டது.
கால்வாயின் மரக்கிளைகள் விழுந்து ஆக்கிரமித்துள்ள பகுதிக்கு சுமார் 50 மீட்டர் தொலைவில் அரசு மருத்துவமனை, தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லக்கூடிய பாலம் அமைந்துள்ளது. பலத்த மழை பெய்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, நீரோட்டத்தை மரக்கிளைகள் தடுப்பதால் அருகேயுள்ள பாலம் உடையும் ஆபத்து உள்ளது.
கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின்போது திருக்குறுங்குடி தளவாய்புரம் அருகே நம்பியாற்றின் குறுக்கே ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது மரக்கிளைகள் விழுந்துள்ள நான்குனேரியன் கால்வாயின் குறுக்கேயுள்ள பாலம் மிகவும் சிறிய பலவீனமான பாலம். ஆற்றில் வெள்ளம் வந்து நீரோட்டம் தடைபட்டால் பாலம் உடையும் நிலை ஏற்படும்.
இந்த மரக்கிளைகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. களக்காடு - வள்ளியூர் சாலையில் ரூ.87 லட்சத்தில் பாலம் கட்டுமானப் பணிகளை பார்வையிட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பலமுறை வந்தபோதிலும், நான்குனேரியன் கால்வாய்க்குள் நீரோட்டத்தை தடுக்கும் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பருவமழை தீவிரமடையும் முன் மரக்கிளைகளை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com