நெல்லை மாவட்டத்தில் இதுவரை 941 மி.மீ. மழை: இயல்பை விட 34% அதிகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 941 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பான அளவைவிட 34 சதவிகிதம் அதிகம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 941 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பான அளவைவிட 34 சதவிகிதம் அதிகம்.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியது:
மாவட்டத்தில் இயல்பான மழையளவு 814.80 மிமீ. நவம்பர் மாத இயல்பான மழையளவு 208.20 மிமீ. கடந்த 15 ஆம் தேதிவரை 114.99 மிமீ. மழை பெய்துள்ளது. நிகழ் மாதம் வரை இயல்பான மழையளவு 703.2 மிமீ. ஆனால், இதுவரை 941.47 மிமீ. மழை பெய்துள்ளது. இப்போது அணைகளில் 68 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 49 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு இருந்தது.
மாவட்டத்தில், பிசான பருவத்தில் நிகழாண்டில் இதுவரை 2,544 ஹெக்டேரில் நெல்லும், 12,899 ஹெக்டேரில் சிறுதானியங்களும், 27,477 ஹெக்டேரில் பயறுவகைப் பயிர்களும், 1,886 ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்களும் பயிரிடப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் பிசான பருவ பயிர் சாகுபடிக்குத் தேவையான விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிறுவனங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு,  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரசாயன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிறுவனங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இப்போது, விவசாயிகளுக்கு மட்டும் மானிய விலையில் உரங்கள் கிடைக்க ஏதுவாக பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 
பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு-குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்திலும் நுண்ணீர் பாசன கருவிகளான மழைத்தூவான்கள், தெளிப்பு நீர் பாசனக் கருவிகள், சொட்டுநீர்ப் பாசன கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
மாவட்டத்தில் உள்ள 19 வட்டாரங்களிலும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மூலமாக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு-குறு விவசாயிகளாக இருந்தால் வட்டாட்சியரிடம் பெறப்பட்ட சான்று ஆகியவற்றுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிசான பருவ நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வரும் 30 ஆம் தேதி கடைசி நாளாகும். நெல், உளுந்து, பாசி, மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்களுக்கு அடுத்த வாரத்திலிருந்து காப்பீடு செய்யலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com