"பொருநை மக்கள் இயக்கம் நாளை தொடக்கம்'

திருநெல்வேலி பொருநை மக்கள் இயக்கத்தின் தொடக்க விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திருநெல்வேலி பொருநை மக்கள் இயக்கத்தின் தொடக்க விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பொருநை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான வி.பொன்னுராஜ், எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய ஆலைகளுக்கு எதிரான போராட்டம், கெளரவக் கொலை, மதச் சண்டைகளில் அப்பாவிகள் உயிரிழப்பு என தினந்தோறும் பல்வேறு பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பிரச்னைகள் சமூகத்தில், சமூக பொருளாதார தளங்களில் குறிப்பாக பண்பாட்டுத் தளத்தில் பெருவாரியான மக்களை பாதிக்கிறபோது சமூக அக்கறையுடன் அனைவரும் ஒரே குரலாய் ஒலிக்க வேண்டியதிருக்கிறது. 
அதற்கு அரசியல் கட்சிகளுக்கு அப்பால் சிந்திக்கக்கூடிய அறிவு ஜீவிகள், அறிஞர் பெருமக்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவினரும் இணைந்து செயல்படும் ஓர் அமைப்பு தேவைப்படுகிறது. அதற்காகவே திருநெல்வேலி பொருநை மக்கள் இயக்கம் தொடங்கப்படுகிறது.
இந்த பொருநை மக்கள் இயக்கம் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான உண்மை நிலையையும், அதற்கான தீர்வையும், பொதுக்கருத்தையும் மக்களின் முன் வைக்கும். இந்த இயக்கம் சுற்றுச்சூழல், தாமிரவருணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்னெடுக்கவுள்ளது. அதற்காக தொடர்ந்து குரல் கொடுக்கப்படும். தாமிரவருணி மாசடைந்து வருகிறது. அதை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இப்போதே தொடங்காவிட்டால், எதிர்காலத்தில் தாமிரவருணி என்ற நதி காணாமல் போய்விடும். பொருநை இயக்கத்தின் தொடக்க விழா வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 
இந்த விழாவில்  அய்யா வைகுண்டர் தலைமைப்பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் அருணன், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள் என்றனர்.
அப்போது பேராசிரியர் அமலநாதன், காப்பீட்டுக் கழக பணியாளர் சங்க கோட்ட பொதுச் செயலர் முத்துக்குமாரசுவாமி, கோட்ட தலைவர் மதுபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com