தமிழக நதிகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்: நீதிபதி சுவாமிநாதன்

தமிழக நதிகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றார் நீதிபதி சுவாமிநாதன்.


தமிழக நதிகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றார் நீதிபதி சுவாமிநாதன்.
தாமிரவருணி மஹா புஷ்கரம் விழா அக்டோபர் மாதம் 12 தினங்கள் நடைபெற்றது. இதையொட்டி, தாமிரவருணி நதிக்கரையில் பல்வேறு தன்னார்வப் பணிகளை மேற்கொண்ட உள்ளூர் குழுவினர், ஆதீனங்கள், மடாபதிகள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் புஷ்கரம் விழாக் குழுவினருக்கு, நம் தாமிரவருணி இயக்கம் சார்பில் பாராட்டு விழா பாளையங்கோட்டை மகராஜநகர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, நம் தாமிரவருணி இயக்கப் பொறுப்பாளர் வித்யாசாகர் தலைமை வகித்தார். அண்ணா பல்கலைக்கழக டீன் ஜி. சக்திநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரான உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரவருணி நதிக்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், விழாவில் சிறப்பான சேவை செய்த தன்னார்வ தொண்டர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பேசியது: தாமிரவருணி மஹா புஷ்கரம் விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். தமிழக நதிகளில் மணல் பெருமளவில் எடுக்கப்பட்டதால் அதன் வளங்கள் அழிந்து வருகின்றன.
நதிகளில் ஆக்கிரமிப்புகளும், கழிவுநீர் கலப்பதும் சவாலான விஷயமாக உள்ளது. தாமிரவருணி நதி மட்டுமன்றி தமிழகத்திலுள்ளஅனைத்து நதிகளையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.
விழாவில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கி. பாஸ்கர் பேசுகையில், நீர் நிலைகள் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறையினரை கருத்தில் கொண்டு இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
விழாவில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மாசானமுத்து, சமூக ஆர்வலர் கோபால்ரத்தினம், நம் தாமிரவருணி இயக்க நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், கல்யாண ராமன், சொர்ணலதா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நம் தாமிரவருணி இயக்க பொறுப்பாளர் நல்லபெருமாள் வரவேற்றார். பள்ளித் தாளாளர் ஜெயேந்திரன் வி. மணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com