திருநெல்வேலி

நெல்லை குறுக்குத்துறையில் தாமிரவருணி புஷ்கரம் விழா நடத்த தடை

DIN

திருநெல்வேலியில் தைப்பூச மண்டபம் மற்றும் குறுக்குத்துறை கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, தாமிரவருணி புஷ்கரம் விழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாமிரவருணி புஷ்கரம் விழா அக். 12 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் வரை தீர்த்த கட்டங்களிலும், படித்துறைகளிலும் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  மகா புஷ்கரம் விழா நடத்த அதிகளவில் பக்தர்கள் செல்ல போதிய பாதை வசதியோ, பக்தர்கள் கூடுவதற்கு போதிய இட வசதியோ இல்லை. பருவமழை காலத்தில் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும்போது, நீராடுபவர்களை பாதுகாப்பது சிரமம். அப்பகுதி நெரிசலான பகுதியாக உள்ளதால் புஷ்கரம் விழா நடத்த இயலாது.
இதேபோல்,  கொக்கிரகுளம் பிள்ளையன் கட்டளைக்குச் சொந்தமான  தைப்பூச மண்டபம் மிகப் பழமையானது. அப்பகுதி ஆற்றில் ஆழம் அதிகம். நீர்ச் சுழல் பகுதி. ஏற்கெனவே இங்கு பலர் நீரில் மூழ்கி உள்ளனர்.  இங்கு பக்தர்கள் நீராடுவதற்கு வசதியில்லை. சரியான பாதை வசதி இல்லை. எனவே,  பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி ஆன்மிக அமைப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி, மேற்கண்ட 2 இடங்களிலும் புஷ்கரம் விழா நடத்த அனுமதி வழங்க வேண்டாம் என திருக்கோயில் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி நதியில்  வரும் அக். 12 முதல் 23 ஆம் தேதி வரை 18 இடங்களில் புஷ்கரம் விழா நடத்த பல்வேறு ஆன்மிக அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இதில், குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் படித்துறை, பிள்ளையன் கட்டளைக்குச் சொந்தமான நெல்லையப்பர் கோயில் படித்துறை (தைப்பூச மண்டபம்) ஆகியவற்றில் அந்த நேரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த இரு இடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. பிற இடங்களில் புஷ்கரம் விழா நடத்த எவ்வித தடையும் இல்லை என்றார்.
மண்டபத்துக்கு பூட்டு: இந்த உத்தரவை அடுத்து தைப்பூச மண்டபத்துக்கு போலீஸார் பூட்டு போட்டு சீல் வைத்தனர். மேலும், தைப்பூச மண்டபத்தில் தூய்மைப்பணி மேற்கொள்ள அறநிலையத்துறை வழங்கிய அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT