சிக்னல் பழுதால் நெல்லை-செங்கோட்டை ரயில் தாமதம்: பயணிகள் அவதி

நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரயில், திருநெல்வேலியில் சனிக்கிழமை ஏற்பட்ட சிக்னல் பழுது காரணமாக, ஒன்றரை கி.மீ. முன்னதாகவே நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். திருநெல்வேலியிலிருந்து செங்கோ

நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரயில், திருநெல்வேலியில் சனிக்கிழமை ஏற்பட்ட சிக்னல் பழுது காரணமாக, ஒன்றரை கி.மீ. முன்னதாகவே நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு காலை 6.20, 9.25, பகல் 1.50, மாலை 6.25 மணிக்கும், மறுமார்க்கத்தில் காலை 6.45, 10.15, பிற்பகல் 2.40, மாலை 5.50 பயணிகள் ரயில்கள் புறப்படுகின்றன. இவை அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் கடவுப்பாதையில் கடந்துசெல்வது வழக்கம். செங்கோட்டையிலிருந்து காலை 6.45-க்குப் புறப்படும் ரயில் திருநெல்வேலிக்கு 9 மணிக்கு வந்து சேரும்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்த அந்த ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். திருநெல்வேலி ரயில் நிலையத்தில் சிக்னல் பழுது காரணமாக திருநெல்வேலி நகரம்-சந்திப்பு ரயில் நிலையம் இடையே சிவபுரம் பகுதியில், ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் ரயில் நிறுத்தப்பட்டது. காலை 9 மணிக்கு வரவேண்டிய ரயிலுக்கு 9.30 மணி வரை சிக்னல் கிடைக்காததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பின்னர், தங்களது குழந்தைகள், உடைமைகளுடன் அவர்கள் தண்டவாளம் வழியாக நடந்தே சென்று திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை அடைந்தனர்.
இதுகுறித்து பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் கூறியது: செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காலை 6 மணிக்கே வேலை, கல்வி நிமித்தம் புறப்படுவோர் குறித்த நேரத்தில் அலுவலகம், கல்வி நிலையங்களுக்கு செல்லாவிட்டால் பெரும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகும் சூழல் உள்ளது. சனிக்கிழமை இந்த ரயில் சுமார் 45 நிமிடங்கள் வரை தாமதமாகியுள்ளது. மக்களின் சிரமத்தை ரயில்வே நிர்வாகத்தினர் புரிந்துகொண்டு இதுபோன்ற பிரச்னை வராமல் தடுக்க வேண்டும். திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு இரவு 8 மணிக்கு புதிதாக பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com